பி‌ப்ரவ‌ரி 17ஆ‌ம் தே‌தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரமாண்ட மனிதச்சங்கிலி

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் 17ஆ‌ம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரமாண்ட மனிதச்சங்கிலி பேரணி நடத்தப்படும் என்று அ‌ந்த இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாறன் கூறினார்.


இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்‌றிரவு கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி பேசுகை‌யி‌ல், எங்கள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகின்ற 17ஆ‌ம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது.

19ஆ‌ம் தேதி கோவையிலும், 24ஆ‌ம் தேதி மதுரையிலும் பேரணி நடைபெறும். புதுவை, சேலம், வேலூர், திருச்சி, தூத்துக்குடி போன்ற இடங்களில் பேரணி நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும்.

அடுத்தகட்டமாக சென்னையில் உள்ள அய‌‌ல்நாட்டு தூதுவர்களை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த உள்ளோம். ஐ.நா. பொது செயலாளருக்கு இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழர்கள் அனைவரும் கோடிக்கணக்கில் இ-மெயில் அனுப்ப வேண்டும். தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் மரண சாசனம் லட்சக்கணக்கில் அச்சடித்தும், சி.டி.யாக தயாரித்தும் மக்களிடம் வழங்க உள்ளோம் எ‌ன்று பழ.நெடுமாறன் பேசினார்.

இ‌ந்த கூட்டத்தில், பா.ஜ.க. மாநில பொது செயலர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஏ.கே.மூர்த்தி, இயக்குனர் சீமான், நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.