திண்டுக்கல் விவசாயின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்

மதுரை: சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச் சாவை சந்தித்த திண்டுக்கல் விவசாயி செல்லமுத்துவின் உடல் உறுப்புகள் வாழ்க்கைக்கு போராடி கொண்டிருக்கும் ஏழு நபர்களுக்கு தானம் வழங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (48). இவர் கடந்த 1ம் தேதி மோட்டார் சைக்கிளில் போய் கொண்டிருந்த போது விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதையடுத்து அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மூளைச் சாவை சந்தித்துவிட்டார். செயற்கை முறையில் மட்டுமே அவரால் இனி சுவாசிக்க முடியும். அதை நீக்கிவிட்டால் உயிர் பிரிந்துவிடும். அவரை காப்பாற்ற முடியாது. அதனால் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் சிலருக்கு வாழ்வளிக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள் செல்லமுத்துவின் இதயம், ஈரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகளை ஆபரேஷன் செய்து பிரித்தெடுத்தனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரேம் காந்தாரி என்பவருக்கு ஈரலும், இதய வால்வுகள் சென்னையில் பிரான்டியர் லைப் லைன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆபரேஷன் செய்த ஒரு மணி நேரத்துக்குள் இதயத்தை வேறு ஒருவருக்கு பொருத்தினால் மட்டுமே அது பயன்படும் என்பதால், செல்லமுத்துவின் இதயம், ஈரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, நோயாளிகளுக்கு பொறுத்தப்பட்டது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சாகுல் அமீது, திருச்சி மூர்த்தி ஆகியோருக்கு சிறுநீரகங்களும் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

செல்லமுத்துவின் இரு கண்களும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

செல்லமுத்துவின் உடல் உறுப்புகளை தானம் செய்த அவரது மகன் செல்வராஜ், மகள் செல்வி மற்றும் குடும்பத்தினரை, பலரும் பாராட்டினர்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.