விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்காவுக்கு 20,000 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பு

கடந்த 25 வருடங்காக 6 போர் நிறுத்தங்களுடன் இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் சிறிலங்கா 20 ஆயிரம் பில்லியன் டொலர் பொருளாதார அழிவுகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கடந்த 25 வருடங்களுக்கு 6 போர் நிறுத்தங்களுடன் நடைபெற்று வரும் போரினால் சிறிலங்கா 20 ஆயிரம் பில்லியன் டொலர் பொருளாதார அழிவுகளை சந்தித்துள்ளது.

எனவே, தற்போது உலகில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக்கொள்ளும் சக்தி சிறிலங்காவுக்கு கிடையாது.

சிறிலங்கா அரசின் ஏற்றுமதித்துறையில் 60 விகிதம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளையே நம்பியுள்ளது.

உல்லாச பயணத்துறை பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களில் பல விடுதிகள் மூடப்படும் நிலை தோன்றலாம்.

ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளின் உயரதிகாரிகள் தற்போது பங்களாதேஸ் போன்ற நாடுகளை நாடி செல்கின்றனர். இதுவும் நீண்டகால போக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும்.

சிறிலங்காவின் தேயிலை தொழில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. றப்பர், கறுவா உற்பத்திகளும் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதால் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1983-களில் 3 லட்சத்து 38 ஆயிரம் உல்லாசப் பயணிகள் இசிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தனர். ஆனால், 2008 ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரம்.

எனினும், கம்போடியாவை எடுத்தோமானால் 1983 ஆம் ஆண்டு 2 லட்சம் உல்லாசப்பயணிகள் அங்கு சென்றிருந்தனர். தற்போது அதன் எண்ணிக்கை 2,000,000 ஆகும்.

எனவே, இந்த இழப்புக்களால் சிறிலங்காவிற்கு ஏற்பட்ட இழப்புக்கள் 6 ஆயிரம் பில்லியன் ரூபாய்களாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.