உலக தலைவர்களுக்கு முன்னுதாரமானமாக மகிந்த திகழ்கின்றார்: டலஸ் அழகப்பெருமா புகழாரம்

பின்லேடனையும் அவரது இயக்கத்தையும் அழிப்பதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு உலக தலைவர்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்படுகின்றார் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமா புகழாரம் சூட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெருமா அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் அமரிக்காவின் முன்னாள் அரச தலைவர் ஜோர்ஜ் புஸ் ஆகியோர் பயங்கரவாதத்தை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனாலும், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தி வரும் போருக்கு அவர்கள் ஒத்துமைப்பு வழங்கியிருந்ததுடன் பாராட்டும் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்கா, பிரித்தானியா நாடுகளின் தற்போதைய அரசாங்கங்கள் கூட சிறிலங்கா அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குகின்றன.

இது அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அனுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்று கூறி மார் தட்டியவர்கள் இன்று வாயடைத்துப் போய் உள்ளனர் என்றார் அவர்.

அதேவேளை, 5 தேர்தல் தொகுதிகளின் 40 பிரிவுகளில் 100 சதவீத வெற்றியை அரச தலைவர் மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என்றும் கூறிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும வெற்றிகளை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதேசவாதத்தை கிளப்புகின்றார் என்றும் குற்றம் சாட்டினார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.