ஈழத்தமிழனின் குரலை வரும் 12ம் திகதி இந்திய பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்ய டெல்லிக்கு 200 பேர் பயணம்

டெல்லி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.09) பாராளுமன்றத்துக்கு முன் பேரணி, மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் சென்னையிலிருந்து இன்று டெல்லி புறப்பட்டனர்.

ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கு எதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்கள்.

ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்கள் லீனா மணிமேகலை மற்றும் கு.வெங்கடாசலம், படைப்பாளிகள் சுகிர்தராணி, அஜயன்பாலா, மாலதிமைத்ரி, மாணவர் கூட்டமைப்பிலிருந்து 60 பேர் உட்பட மொத்தம் 200பேர் சென்னையில் இருந்து தொடர்வண்டியில் புறப்பட்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இவர்களை வழியனுப்பி வைத்தார். இந்த 200பேருடன் டெல்லி பல்கலை மாணவர்கள் 1000 பேர் இணையவிருக்கிறார்கள். மேலும் டெல்லி தமிழர்களும் இணைந்து 2000 பேராக சேர்ந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.

போராட்ட கோரிக்கை:

1) ஈழத் தமிழர் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போருக்கு துணை செய்யாதே.

2) தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு.

3) தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்.

4) கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்துகிறார்கள்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.