வன்னி போர் முனையிலிருந்து 16,000 தமிழர்கள் வெளியேற்றம்: ராணுவம்

கொழும்பு: வன்னி போர் முனையிலிருந்து இதுவரை 16 ஆயிரம் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

வன்னி போர் முனையில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள், இலங்கையை கோரி வருகின்றன.

இதுவரை இதுகுறித்து செவி சாய்க்காமல் இருந்து வந்தது இலங்கை அரசு. அதேசமயம், பாதுகாப்பு வளையம் என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரும் அப்பாவிகளை குறி வைத்து படையினர் தாக்கி அழித்ததால் அப்பாவி மக்கள் வெளியேறி வர தயக்கம் காட்டினர்.

இந்த நிலையில் வன்னி போர் முனையிலிருந்து இதுவரை 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், வன்னி பகுதியில் இருந்து கடந்த 8 நாள்களில் ஏராளமான தமிழர்கள் யாழ்ப்பாணம், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணம் முகாம்களுக்கு வந்துள்ளனர். இவர்களில் பெண்கள், குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

வரும் நாள்களில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அரசுப் பகுதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

இவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனராம். இதுகுறித்த புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று நடந்த இரு வேறு தாக்குதல்களில் 41 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் முன்னேறிவரும் ராணுவத்தினரைத் தாக்க, லாரி ஒன்றில் ஆயுதங்களுடன் புலிகள் வந்தனர். அந்த லாரியை ராணுவத்தினர் பீரங்கி மூலம் சுட்டனர். இதில் லாரியில் வந்த 34 புலிகளும் கொல்லப்பட்டனர்.

அதேபோல, கிழக்கு முல்லைத் தீவு கடற்பகுதியில் புலிகள் வந்த 2 படகுகளை கடற்படை மூழ்கடித்தது. அந்த படகுகளில் வந்த 6 பேரும் கொல்லப்பட்டனர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.