கொல்லப்பட்ட சைமனின் உடலை வழங்க தீவிரவாதிகள் பேரம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக ஊழியர் சைமனின் உடலை ஒப்படைக்க வேண்டுமானால், பணம் கொடுக்க வேண்டும், தங்களது தலைவனின் மகனை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என தலிபான் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனராம்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சைமன், ஆப்கானிஸ்தானில் பேக்கரி கடையில் சமையலராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி பக்ராம் விமான தளத்திற்கு உணவு சப்ளை செய்யச் சென்றபோது அவர் உள்பட 3 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

சைமனை மீட்கும் முயற்சியில், காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் நேற்று சைமன் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது.

இது கள்ளக்குறிச்சி அருகே பிரம்மகுண்டம் கிராமத்தில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரை இடி போல தாக்கியது. சைமனின் மனைவி வசந்தி, தாயார் அழகம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் காபூலில் உள்ள சைமனின் அண்ணன் சுப்ரமணியத்தை தீவிரவாதிகள் நேற்று தொடர்பு கொண்டு உடல் வேண்டுமானால் பணம் தர வேண்டும், சிறையில் உள்ள எங்களது தலைவரின் மகனை விடுவிக்க வேண்டும் என பேரம் பேசி வருகின்றனராம்.

இதனால் சைமனின் குடும்பத்தினர் உடல் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

உயிரைத்தான் பறித்து விட்டனர், உடலையாவது தீவிரவாதிகள் கொடுக்க முன்வர வேண்டும். அதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் உதவ வேண்டும் என சைமனின் மனைவி வசந்தி கதறலுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சைமன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் உதவி

இதற்கிடையே, சைமனின் படுகொலைக்கு முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். சைமன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சைமன் என்பவர் ஆப்கானிஸ்தானத்திற்கு வேலைக்கு சென்றிருந்தார். அங்கு அவர் தலீபான் தீவிரவாதிகளால் பிணையக் கைதியாகக் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியுற்ற தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, சைமன் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவரது குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.