ஆந்திர சட்டசபையில் வெடித்தது சத்யம் மோசடி : 34 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

ஐதராபாத் : ஆந்திர மாநில சட்டசபையில் சத்யம் மோசடி குறித்த விவகாரம் பெரிய அளவில் எழுந்தது. இதன் எதிரொலியாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த 34 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர்.

முன்னதாக நடந்த காரசார விவாதத்தில் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: சத்யம், மைடாஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய கம்பெனிகளில் நடந்த முறைகேடுகள் பற்றி, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. சத்யம் நிறுவன மோசடி விவகாரம், “செபி’, இந்தியன் ரிசர்வ் வங்கி உட்பட பல்வேறு மத்திய நிறுவனங்கள் தொடர்புடையது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனமான சத்யம் மோசடி நடந்த போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் தூங்கிக் கொண்டிருந்தது. இந்த விஷயத்தில் மக்கள் ஆளுங்காங்கிரஸ் அரசை மன்னிக்க மாட்டார்கள். மாநில அரசு சத்யம் நிறுவனத்தின் துணை நிறுவனமான மைடாஸ் இன்ப்ராவிற்கு 38 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு கான்ட்ராக்ட்கள் வழங்கி உள்ளது. சத்யம் மோசடி குற்றவாளிகளை மாநில போலீசார் கைது செய்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், மாநில உள்துறை அமைச்சர் கே.ஜனா ரெட்டி, சத்யம் மோசடி குற்றவாளிகள் போலீசில் சரணடைந்தாக ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

பின் இதுகுறித்து அரசின் தலைமைக் கொறடா என்.கிரண்குமார் ரெட்டி பேசியதாவது: தெலுங்கு தேச கட்சி ஆட்சியில் 12.2 சதவீத கான்ட்ராக்ட்கள், மைடாஸ் இன்ப்ரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 6.8 சதவீதம் கான்ட்ராக்ட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் வெளிப்படையான நேர்மையான முறையில் ஒளிவு மறைவின்றி அளிக்கப்பட்டது. சத்யம் மோசடி போன்று எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க, மோசடிக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கடந்த 2003ம் ஆண்டு சத்யம் நிறுவன வருமான வரி ஏய்ப்பு வெளிச்சத்திற்கு வந்த போது, சந்திரபாபு நாயுடு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த வழக்கை விசாரிக்காமல் முறியடித்தார். மேலும், என்.டி.ஆர்., அறக்கட்டளைக்கு ராமலிங்க ராஜு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தது பற்றியும், வெளிநாட்டில் படிக்கும் சந்திரபாபு நாயுடுவின் மகன் கல்விக்கு ராஜு பணம் கொடுத்தாக மீடியாக்கள் வெளியிட்ட செய்திக்கும் விளக்கமளிக்க வேண்டும்.

இந்நிலையில், ஆந்திர சட்டசபையில் பெரும் கூச்சல் அமளி ஏற்பட்டதை அடுத்து சத்யம் விவகாரத்தைக் கிளப்பி இடையூறு விளைவித்த, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, இடதுசாரி கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த 34 உறுப்பினர்கள் ஒரு நாள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அந்த முடிவை சபாநாயகர் அறிவித்த போது சந்திரபாபு நாயுடு சபையில் இல்லை.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.