வரலாறு காணாத அளவில் நெல் விலை உயர்வு: மூட்டை அரிசி ரூ. 400 வரை அதிகரிப்பு

அரிசி விலை, வரலாறு காணாத அளவில், மூட்டைக்கு 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மே மாதத்துக்கு பின், அரிசி, கிலோ 50 ரூபாய் வரை விற்கப்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் அரிசி தேவையை 40 சதவீதம் அளவுக்கு கர்நாடகா, ஆந்திர மாநிலங்கள் தான் பூர்த்தி செய்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் இருந்து, பிற மாநிலங்களுக்கு நெல், அரிசி ஏற்றுமதி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல், ஆந்திராவில் இருந்து நெல் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தில் நிஷா புயல் காரணமாக, நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில், நெல் விளைச்சலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 30 சதவீதம் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. தமிழக அரசு, ஒரு ரூபாய் அரிசிக்காக, அதிகளவில் நெல்லை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து விடுவதால், வெளி மார்க்கெட்டில் நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசும் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 1,050 ரூபாய் என உயர்த்தியுள்ளதால், வெளி மார்க்கெட்டிலும், நெல் விலை உயர்ந்துள்ளது. குவிண்டால் 1,700 ரூபாய் வரையிலும், வெளி மார்க்கெட்டில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வாங்க தயாராக இருந்தும், நெல் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சட்டீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படும் நெல், ரயில் சரக்கு கட்டணம்(9 சதவீதம்) உயர்வதால், தமிழகத்துக்கு வரும் போது, குவிண்டால் 2,000 ரூபாய் அடக்கம் ஆகி விடுகிறது. இதனால், அரிசி விலையை உயர்த்தி விற்க வேண்டிய கட்டாயம், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்படுகிறது. இந்நிலையில், கர்நாடகா, ஆந்திர வியாபாரிகள், தமிழகத்தில் நெல்லை அதிக விலை கொடுத்து வாங்கி, தங்கள் மாநிலத்துக்கு கொண்டு செல்கின்றனர். தமிழகத்தில் செயல்பட்டு வந்த அரிசி ஆலைகள், தங்களுக்கு போதிய நெல் கிடைக்காமலும், நெல்லை அதிக விலை கொடுத்து வாங்கி உற்பத்தி செய்தால் கட்டுப்படியாகாது என்பதாலும், தங்களின் உற்பத்தியை வெகுவாக குறைத்து விட்டன. ஆயிரக்கணக்கான ஆலைகள், தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி விட்டன. தமிழகத்தில், ஜூலை 2008 கடைசி வாரத்தில் இயங்கி வந்த 7,400 அரிசி ஆலைகளில், தற்போது, 3,000 அரிசி ஆலைகள் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளன. மீதமுள்ள ஆலைகளும், 50 சதவீத அளவுக்கே உற்பத்தி செய்து வருகின்றன. அதனால், மார்க்கெட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர். புதிய அரிசி, வெள்ளை பொன்னி முதல்ரகம் குவிண்டாலுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 3,800 ரூபாய்க்கு விற்கிறது. புதிய ரக அரிசி விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வால், மே மாதத்தில், அரிசி விலை, கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.