இந்திய தூதரக அதிகாரிகள் பிளாக்-ஃபேஸ்புக் பயன்படுத்த தடை

டெல்லி: இந்திய தூதரக அதிகாரிகள், ஃபேஸ்புக், பிளாக் உள்ளிட்டவற்றையும், அதிகாரப்பூர்வ அலுவலக இமெயில்களைத் தவிர வேறு இ மெயில்களையோ பயன்படுத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது.

இவற்றைப் பயன்படுத்துவதால் முக்கிய தகவல் பரிமாற்றங்கள், தகவல்கள் லீக் ஆகி விடும் என்பதால்தான் இந்த தடையை பிறப்பித்துள்ளது வெளியுறவுத்துறை.

கடந்த எட்டு மாதங்களாக தனது கம்ப்யூட்டர் கட்டமைப்பு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து மத்திய வெளியுறவுத்துறை பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தது. இதில் எந்த வகையில் தகவல்கள் கசியலாம், எப்படி அவற்றைப் பாதுகாக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது வெளியுறவுத்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஃபேஸ்புக், பிளாக், அலுவலக இமெயில்கள் தவிர்த்த பிற இ மெயில்கள் உள்ளிட்டவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது. பிளாக்கில் எழுதக் கூடாது, பிளாக்கை உருவாக்கிக் கொள்ளவும் கூடாது.

கடந்த வாரம் அதிகாரிகளுக்கு ஒரு சர்க்குலரை வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுப்பியிருந்தது. அதில் ஃபேஸ்புக், ஆர்குட், இபிபோ உள்ளிட்ட தளங்களுக்கு ல்ல வேண்டாம். அதேபோல, காஸா உள்ளிட்ட இசை தளங்களுக்குச் சென்று இசையை டவுன்லோட் செய்யக் கூடாது, பிளிக்கர், பிகாஸா உள்ளிட்ட புகைப்பட இணையதளங்களுக்குச் செல்லக் கூடாது. அங்கு எந்த புகைப்படங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் இடம் பெற்றுள்ளதாம்.

மேலும் ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் உள்ளிட்டவற்றை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்ற கட்டுப்பாடுகள், பிரதமர் அலுவலகத்திற்கும் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், தேசிய தகவல் தொடர்பு மையம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ இமெயில்களை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வேறு மெயில்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.

ஆனால் இந்த மெயில்களை அக்சஸ் செய்வதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், அரசின் கட்டுப்பாடுகள் பெரும் சிரமத்தைக் கொடுக்கும் எனவும் தூதரக அதிகாரிகள் புலம்புகின்றனராம்.

டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்தில் கிட்டத்தட்ட 600 கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் இன்டர்நெட் இணைப்பு உள்ளது. தற்போது இவை அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு அவற்றின் பயன்பாட்டுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கம்ப்யூட்டர்களில் கடுமையான பயர்வால்கள், ஸ்பாம் மெயில் ஃபில்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்கும்படி வெளியுறவுத்துறை அலுவலக பணியாளர்கள், அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனராம்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.