விசுவமடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா 500 பொதுமக்கள் கொல்லப்பட்ட போது கண்டனம் தெரிவிக்காதது ஏன்?: செல்வம் கேள்வி

சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நேற்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமானோர் காயப்பட்ட போதும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளதுடன் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் உண்மை நிலைமை என்னவென்று யாருக்கும் தெரியாது. அத்துடன் அப்பிரதேசத்தில் போர் தீவிரமாக நடைபெறுகின்றது.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைத்தரப்பும் கூறுகின்ற கதைகளை கேட்டு எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று விடுதலைப் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்து கண்டனம் தெரிவித்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விசுவமடு பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் அங்கு நின்ற பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இவை படையினர் கூறிய தகவல்கள்தான்.

உண்மையில் அங்கு எப்படி குண்டு வெடித்தது என்பது குறித்து எவருக்கும் தெரியாது. எவ்வாறாயினும் படையினருடன் பொதுமக்களும் அங்கு கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது தெரிகின்றது. அதனையிட்டு நாங்களும் வருத்தமடைகின்றோம்.

ஆனாலும், இக்குண்டு வெடிப்பு எப்படி நடைபெற்றது, பொதுமக்கள் அதற்குள் எப்படி சிக்கிக்கொண்டனர் என்பதை அறிவதற்கு முன்னர் படையினர் கூறுவதனை கேட்டுவிட்டு அமெரிக்க தூதுவர் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையானது.

அங்கு நின்ற பொதுமக்கள் கொல்லப்பட்டது அமெரிக்க தூதுவருக்கு வேதனையாக இருந்திருக்குமானால் வன்னியில் படையினரின் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 50, 60 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். நூற்றுக்கும் அதிகமானனோர் காயமடைகின்றனர். இது அவருக்கு வேதனையாக தெரியவில்லையா?.

அரசாங்கம் எப்படியான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதனை ஜனநாயகமாக பார்க்கும் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் எப்போதும் தங்கள் நலன்களை கருத்தில் கொண்டுதான் அறிக்கை விடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

இருந்தாலும் தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் நடவடிக்கையில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.