அம்பாறையில் படையப் பொருட்களுடன் சென்ற உழவூர்தி மீது கண்ணிவெடித் தாக்குதல்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை – உகந்தை வீதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் உழவூர்தி மீது இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிசக்தி வாய்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

பாணமை – உகந்தை வீதியில் இன்று திங்கட்கிழமை உகந்தையில் இருந்து பாணமை நோக்கி உழவூர்தியில் பெருமளவு படையப்பொருட்களை சிறிலங்கா படையினர் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

உழவூர்தியை இலக்கு வைத்து சலவைவெட்டுக்கும் நன்னாசிமலைக்கும் இடையில் விடுதலை புலிகள் அதிசக்தி வாய்ந்த கண்ணிவெடித் தாக்குதலை நடத்தினர்.

இதில் உழவூர்தி முழுமையாக சேதமடைந்ததுடன் அதில் கொண்டு செல்லப்பட்ட படையப்பொருட்கள் சுக்குநூறாகின.

இத்தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்தில் உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கான உழவூர்தி பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டதை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்ததாக அம்பாறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.