சந்திர பாபுவுக்கு ராஜூ கொடுத்த லஞ்சம் ரூ. 275 கோடி!

ஹைதராபாத்: தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு சத்யம் ‘மோசடி’ தலைவர் ராமலிங்க ராஜூ ரூ. 275 கோடி வரை லஞ்சமாக கொடுத்திருப்பதாக அக்கட்சியிலிருந்து விலகிய பிஎன்வி பிரசாத் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி கடந்தாண்டு காங்கிரசில் சேர்ந்தவர் பிஎன்வி பிரசாத். தற்போது அவர் சந்திரபாபு நாயுடு தனது ஆட்சிக் காலத்தில் சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூக்கு பல சலுகைகள் அளித்ததாகவும், அதற்கு கைமாறாக ராஜூ கோடிகளை கொட்டி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் கூறுகையில்,

சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேசின் படிப்பு செலவுக்கு அமெரிக்காவின் கார்னிஜ் மெலன் பல்கலைக்கழகத்தில் 1999ல் ராஜூ சார்பில் ரூ. 10 கோடி கட்டப்பட்டது.

அதேபோல் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் அவர் எம்பிஏ படிக்க ராஜூ ரூ. 15 கோடி கொடுத்தார். இது 2003ல் நடந்தது. சந்திரபாபு ஆட்சியில் இருந்த போது அவரது என்டிஆர் மாளிகையை நவீனப்படுத்தவும், வசதிகளை அதிகரிக்கவும் ராஜூவிடம் இருந்து 100 கோடி ரூபாய் வாங்கப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பொறுப்பும் ராஜூவிடம் தான் வழங்கப்பட்டது. ராஜூ இதுவரை 5 முறை தெலுங்கு தேச கட்சிக்கு அடையாள அட்டை தயாரிக்க பணம் கொடுத்துள்ளார். இதற்காக சந்திரபாபு 100 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன், ஹைதராபாத் வந்தபோது அவரது தொண்டு நிறுவனத்துக்கு ராஜூ சார்பில் 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் சந்திரபாபு நாயுடு சொல்லித் தான் செய்யப்பட்டது என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.