டாடா: 1650 பேர் வேலையில் சேர்ப்பு!!

ஜாம்ஷெட்பூர்: ஒருபக்கம் கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள டாடா நிறுவனம், இன்னொருபக்கம் முதல்முறையாக புதிய பணியாளர்களைச் சேர்த்துள்ளது.

ஆனால் இப்படி சேர்க்கப்பட புதிய பணியாளர்கள் அனைவருமே தற்காலிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனத்தின் விற்பனை இந்த நிதிஆண்டில் கடுமையாக சரிந்ததுடன், மூன்றாவது காலாண்டில் ரூ.200 கோடியை நஷ்டமாகச் சந்தித்துள்ளது டாடா.

இதனால் டாடா மோட்டார்ஸின் நிர்வாகப் பிரிவுகளில் ஏற்கெனவே ஆட்குறைப்பைச் செய்துள்ளது. டாடா குழுமத்தின் பிரிட்டிஷ் பிரிவான ரோவரில் 3500 பணியாளர்கள் நீக்கப்பட்டனர். டாடா கோரஸ், டாடா பவர் என பல தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு தொடர்ந்தவண்ணம் உள்ளது.

இந்த நிலையில்தான் சமீபத்தில் 1,650 பேரை தற்காலிய பணியாளர்களாகச் சேர்த்திருக்கிறது.

ஜாம்ஷெட்பூரில் இருக்கும் டாடாவின் ஹெவி டூட்டி கமர்ஷியல் வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் இவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு கனரக வாகன விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததால் 3 முறை மூடப்பட்ட பிரிவு இது. இங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த 700 க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

ஆனால் புத்தாண்டில் கனரக வாகனங்களின் விற்பனை ஓரளவு நம்பிக்கை தந்ததால், மீண்டும் உற்பத்தி துவங்கி விட்டது. எனவே பிப்ரவரி துவக்கத்திலிருந்து 1,650 பேரை தற்காலிய பணியாளர்களாக சேர்த்துள்ளனர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.