தலிபான்களால் கடத்தப்பட்ட தமிழக ஊழியர் சைமன் படுகொலை

டெல்லி: தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சைமன், கேட்ட பணம் தரப்படாததால், படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சைமன். 38 வயதாகும் சைமன், ஆப்கானிஸ்தானில் உள்ள இத்தாலிய உணவகமான பியானோ என்ற பேக்கரிக் கடையில் சமையலராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிறுவனம், ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இத்தாலிய வீரர்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டுதொடக்கத்தில்தான் ஆப்கானிஸ்தானில் வேலையில் சேர்ந்திருந்தார் சைமன்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி சைமன், பக்ராம் விமான தளத்தில் உள்ள சர்வதேச பாதுகாப்பு உதவி படை முகாமில் உணவு வழங்குவதற்காக சைமன் ஒரு வாகனத்தில் சென்றார்.

அவருடன் ஆப்கானிஸ்தான் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் சென்றார். காரை இன்னொருவர் ஓட்டிச் சென்றார். அப்போது அவர்களை வழிமறித்துப் பிடித்த தலிபான் தீவிரவாதிகள் 3 பேரையும் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று விட்டனர்.

பிடித்துச் செல்லப்பட்ட சைமனை மீட்கக் கோரி இந்திய அரசுக்கு தமிழக அரசின் மூலம் சைமனின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தூதரக முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.

காபூலில் உள்ள இந்தியத் தூதரகமும், ஹெராட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகமும், ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து சைமனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.

இந்த நிலையில் சைமனை விடுவிக்க ரூ. 24 லட்சம் பணம் தர வேண்டும் என நிபந்தனை விதித்தனர் தீவிரவாதிகள். இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் தலிபான் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் சைமனை தீவிரவாதிகள் படுகொலை செய்து விட்டனர். இதுதொடர்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இத்தகவலை ஆப்கானிஸ்தானில் உள்ள சைமனின் சகோதரர் சுப்ரமணியம் உறுதிப்படுத்தியுள்ளார். சைமனை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை அறிந்து கள்ளக்குறிச்சியில் உள்ள சைமனின் மனைவி வசந்தி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் சமைந்து விட்டனர். சைமனின் குடும்பத்தினர் கதறி அழுதபடி உள்ளனர். அவரது வீடு உள்ள பகுதி பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 3வது இந்தியர் சைமன். இதற்கு முன்பு எல்லை சாலைகள் அமைப்புக் கழகத்தின் டிரைவரான எம்.ஆர்.குட்டி, தொலைத்தொடர்பு என்ஜீனியர் சூரியநாராயணா ஆகிய இருவரும் தலிபான்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.