முல்லைத் தீவை நோக்கி கரூர் வழக்கறிஞர்கள் !

கரூர் : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் கரூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் முல்லைத்தீவுக்கு செல்ல உள்ளனர்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டமும், நீதி மன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இப் போராட்டத்தின் உச்ச கட்டமாக கரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் , தூத்துக்குடி வழக்கறிஞர்களுடன் இணைந்து முல்லைத் தீவுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

கரூரில் உள்ள மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் கூட்டிய கூட்டத்தில் கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போர் நிறுத்தம் கோரி முல்லைத் தீவுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு, கரூரில் இருந்து கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் வழக்கறிஞர்கள் ரமேஷ், நடேஷ், பாண்டியன், நெடுஞ்செழியன், லட்சுமணன் உள்பட சுமார் 11 பேர் தூத்துக்குடிக்கு புறப்பட்டனர்.

அங்கிருந்து படகு மூலம் முல்லைத் தீவுக்கு செல்ல உள்ளனர். இதற்கான உரிய ஏற்பாடுகள் செய்துள்ளதாக வழக்கறிஞகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் இவர்கள் முல்லைத் தீவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடும் முன்பு தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிய வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.