வன்னியில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை வத்திக்கானில் பாப்பரசரிடம் தெரிவிப்பேன்: யாழில் வத்திக்கான் தூதுவர்

வன்னியில் தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற துன்ப துயரங்களை விரைவில் வத்திக்கான் சென்று பரிசுத்த பாப்பரசருக்கு எடுத்துரைப்பேன் என்று பாப்பரசரின் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் அதி.வண.மரியா செனாரி ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கான வத்திக்கான் தூதுவராக பணியாற்றி சிரியாவுக்கு இடமாற்றமாகிச் செல்லும் அவருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் பிரிவுபசார நிகழ்வு நடத்தப்பட்டது.

யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையுடன் சேர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

பாப்பரசரின் தூதுவர் மேலும் கூறியதாவது;

வன்னிப்பகுதியில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் அங்கு வாழுகின்ற மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும்.

வன்னியில் வாழுகின்ற மக்கள் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு ஏற்ற நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும். இதற்காக அனைவரும் மேற்கொள்கின்ற பிரார்த்தனைகள் வரவேற்கத்தக்கது.

விரைவில் நான் வத்திக்கான் சென்று பரிசுத்த பாப்பரசரைச் சந்திக்கும் போது வன்னியில் இடம்பெற்று வரும் யுத்தத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக தெளிவாக எடுத்துக்கூறுவேன்.

வன்னி மக்களுக்காவும் அவர்களின் நிம்மதிக்காகவும் சுபீட்சத்துக்காகவும் அனைத்து மக்களும் மேற்கொண்டுவரும் பிரார்த்தனைகள் தொடர்பாகவும் பாப்பரசரிடம் எடுத்துக் கூறுவேன் என்றார். இத்திருப்பலியில் பெரும் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.