விஸ்கோஸில் போலீசார் அதிரடி ரெய்டு 5 பேர் கைது; பல லட்சம் ரூபாய் பொருள் மீட்பு: திருடர்களை கண்டதும் சுட உத்தரவு

மேட்டுப்பாளையம்: சிறுமுகை விஸ்கோஸ் தொழிற்சாலையில் சிறப்புப் படை போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஆற்றோரத்தில் மறைத்து வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள, 40 டன் இரும்புப் பொருட்கள் பிடிபட்டன.

இது சம்பந்தமாக ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருடர்களைக் கண்டதும் சுட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். சிறுமுகை, விஸ்கோஸ் தொழிற்சாலை 2002ம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் மின்சாரமும் போதிய பாதுகாப்பும் இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக கொள்ளைக் கும்பல் புகுந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்பு, காப்பர் மற்றும் மின் மோட்டார் பொருட்களைத் திருடி வருகிறது. இந்த ஆலை தற்போது கொள்ளையரின் கூடாரமாக மாறியுள்ளது. ஆலையில் உள்ள இரும்புப் பொருட்களை அறுத்தெடுத்து பரிசல் மூலம் கடத்தி வருகின்றனர்.

கோவையில் புதிய ரூரல் எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற கண்ணனுக்கு, விஸ்கோஸ் ஆலையில் திருட்டு நடைபெறுவது குறித்து தகவல் கிடைத்தது. உடனடியாக ஆலையில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார். சிறப்புப்படை போலீசாருடன், சிறுமுகை, காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர்கள், விஸ்கோஸ் தொழிற்சாலை, பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் சோதனை நடத்தினர். இச்சோதனையின்போது, தொழிற்சாலையில் திருடப்பட்டு, ஆலையின் பின்புறம் ஆற்றோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்புப் பொருட்களை ஒரு திருட்டுக் கும்பல் எடுத்துக் கொண்டிருத்தது. இவர்கள் போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடினர்.

இதில் அம்மன்புதூர் வேலுசாமி(33) தொப்பம்பாளையம் முருகேசன்(25) பெரியகள்ளிப்பட்டி மணி(30) குரும்பபாளையம் பொங்கையன்(29) மாரியப்பன்(40) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஆற்றோரத்தில் மறைத்து வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 40 டன் இரும்புப் பொருட்களும், ஜெனரேட்டர் மற்றும் மின்சாதனப் பொருட்களும் பிடிபட்டன. இப்பொருட்களை மூன்று வேன்களில் போலீசார் ஏற்றிச் சென்றனர். திருட்டுப் பொருட்களைப் பார்வையிட்ட கோவை ரூரல் எஸ்.பி., கண்ணன் கூறுகையில், “”சிறுமுகையில் மூடியுள்ள விஸ்கோஸ் ஆலையில் நடந்த திருட்டுகள் தொடர்பாக 18 கொள்ளை வழக்குகள் பதிவு செய்து, இதில் சிலருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மூவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். “”கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையில் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.