சில்மிஷம் செய்த திருடனின் நாக்கை கடித்தாள் மாணவி

கொழும்பு : வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த பலே திருடனின் நாக்கை மாணவி கடித்து துப்பி, போலீசில் சிக்க வைத்தார். இலங்கையில் நடந்துள்ள இந்த பரபரப்பு சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: கொழும்பு அருகில் உள்ள நிகோம்போ என்ற இடத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம், அவரது அண்ணணும், அண்ணியும் வெளியே சென்றிருந்தனர்.

மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த ஒரு திருடன், கத்தி முனையில் மாணவியிடம், அலமாரியின் சாவியைக் கொடு என்று மிரட்டினான். நடுங்கிப் போன மாணவி, சாவியை அவனிடம் கொடுத்தார். இருப்பினும், அலமாரியில் விலைமதிப்புடைய பொருட்கள் எதுவுமே கிடைக்காததால், ஆத்திரமடைந்த திருடன், மாணவியை கற்பழிக்க முயன்றான். இதனால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மாணவி போராடினாள். இதில், மாணவிக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும், வலியைப் பொறுத்துக் கொண்டு, திருடனின் நாக்கை கடித்துத் துப்பினார். இதில், அவனது நாக்கு இரண்டு துண்டுகளானது. வலியால் துடி துடித்துப் போன அந்தத் திருடன், அங்கிருந்து தப்பினான். இந்நிலையில், வெளியில் சென்றிருந்த தனது அண்ணனிடம் நடந்த விவரங்களை மாணவி கூறினாள்.

மேலும், திருடனின் துண்டான நாக்கையும் அவரிடம் காண்பித்தாள். இதையொட்டி, அப்பகுதி போலீசாரிடம், மாணவியின் அண்ணன் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார், அப்பகுதி மக்களை உஷார்படுத்தினர்.இந்நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற திருடனின் நாக்கு துண்டான விஷயம் குறித்து டாக்டர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், மருத்துவமனைக்கு சென்ற போலீசார், திருடனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.