தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும்- கருணாநிதி

சென்னை: தாங்கொணா வலியுடன் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நான் தொலைக்காட்சி செய்திகளில் இலங்கை தமிழர் உரிமைப் போர் குறித்து; நமது தமிழகத்தில் கட்சிகள் இரு பிரிவாக நின்று குரல் கொடுப்பதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:

பத்துக்கு மேற்பட்ட டாக்டர்களின் மேற்பார்வையுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, தாங்கொணா வலியுடன் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நான் தொலைக்காட்சி செய்திகளில் இலங்கை தமிழர் உரிமைப் போர் குறித்து; நமது தமிழகத்தில் கட்சிகள் இரு பிரிவாக நின்று குரல் கொடுப்பதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

அந்த பேரணிகளிலும், கூட்டங்களிலும் நானும் கலந்துகொள்ள முடியாமல் உடல் நலிவுக்கு ஆளாகியிருக்கிறேனே என்ற கவலை என்னை வாட்டுவதை விட; நான் 2 நாளைக்கு முன்பு; “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!” என்ற தலைப்பில் எல்லா கட்சிகளிலும் உள்ள உடன்பிறப்புகளுக்கும் விடுவித்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியது மட்டுமல்ல; பிறிதோர் அணியின் கூட்டங்களில் பேசியோரும், பேட்டி கொடுத்தோரும் என்னை மிக இழிவுபடுத்தித் தூற்றியிருக்கிறார்கள்.

அதனால் எனக்கு அணுவளவு வருத்தமும் இல்லை. அவர்கள் பேசுவது அவர்கள் மனச்சாட்சிக்கே சரியென்று பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

என்னையும், இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் முன்னணியினரையும்; இப்படி ஒரு சிலர் தூற்றுகிறார்கள், மேடையில் நின்று நமது அணுகுமுறையை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதற்காக, இந்தப் பேரவையில் உள்ள யாரும் அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை; பதில் சொல்ல வேண்டாம் என்றும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் – அண்ணாவின் அறிவுரை இது! இன்றைய நிலையில் என் உடல் தாங்குகிறதோ – இல்லையோ; உள்ளம் தாங்கித் தானே ஆக வேண்டும் – இலங்கை தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.