வவுனியாவில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் வவுனியா பகுதியில் சுட்டுக்கொலை

வவுனியாவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்த போது இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இருவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இவர்களது சடலங்கள் பின்னர் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற படையினரும் பொலிஸாரும் அங்கு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலை நடத்தியுள்ளனர்.

இதேநேரம், வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் வியாழக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது சடலம் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர் நிசாந்தன் (18 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வவுனியா பட்டகாடு பகுதியில் இளைஞனொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வீதியோரத்தில் குப்பை மேட்டுக்கு அருகில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இவரது சடலம் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரியில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.