சிறிலங்காவின் 61 ஆவது சுதந்திர நாளில் நோர்வே பேர்கன் நகரில் கண்டனப் பேரணி

சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைக் கண்டித்து நோர்வேயின் பேர்கன் கடந்த புதன்கிழமை மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

சிங்களவர்களுக்கு தமிழர்கள் அடிமையான சிறிலங்காவின் 61 ஆவது சுதந்திர நாளினை புறக்கணிக்கும் முகமாகவும், தமிழினப் படுகொலையைக் கண்டித்து, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.

மாலை 4:00 மணிக்கு தொடங்கி மாலை 7:00 மணிக்கு முடிவடைந்த பொதுக்கூட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவிலான நோர்வேஜிய மக்களும் கலந்து கொண்டனர்.

கடும்பனி கொட்டிய போதிலும் கலந்துகொண்ட மக்கள் பதாதைகளையும், தீப்பந்தங்களையும் ஏந்தியவாறு நோர்வேஜிய மொழியில் முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

இப்பொதுக்கூட்டம் நடைபெற்ற வளாகத்தில், வன்னியில் சிங்களப் படைகளால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் மனித அவலங்களின் காணொளித் தொகுப்பும் காண்பிக்கப்பட்டது.

அனைத்துப் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன், சிறிலங்கா அரசிற்கு எதிரான தமது கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செங்கட்சியின் தலைவர் தூர்ஸ்ரைன் டால நோர்வே உட்பட இணைத்தலைமை நாடுகள் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கீழே போடுமாறு கூறியதைக் தவறான அணுகுமுறை எனக்கூறியதோடு, சிறிலங்கா அரசாங்கம் மீதே போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேநாள் மாலை பேர்கன் நகரில், அனைத்துக் கட்சிகளின் பிராந்திய தலைவர்களும் கூட்டாக சிறிலங்காவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நோர்வே வெளிநாட்டமைச்சருக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks :puthinam.com

Leave a Reply

Your email address will not be published.