திமுக-காங்கிரஸுக்கு பெரும் சரிவு: கருத்துக் கணிப்பு

சென்னை: இலங்கை இனப்பிரச்சினை நாடாளுமன்றத் தேர்தலில் பெரிதாக எழுப்பப்பட்டால் அது திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தும் என லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நேற்று லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் முழு விவரம்…

கடந்த மாதம் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும், பின்னர் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் 3100 பேரிடம் கருத்துக்கள் சேரிக்கப்பட்டு இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இலங்கை தமிழர் பிரச்சனையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் மனநிலை திமுகவுக்கு எதிராகவே அமையும். காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இலங்கை அரசு தொடுத்துள்ள போரை மத்திய அரசின் செயல்பாடுகள் ஆதரிப்பதாகவே அமைந்துள்ளன என்று பெரும்பாலானோர் கருத்து கூறியுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேசத் தொடங்கியதுமே மக்களிடம் பயம் கலந்த தயக்கம் நிலவியதாகவும் நகரப் பகுதி மக்களை விட கிராமப் பகுதி மக்கள் இலங்கை தமிழர்கள் மீது அதிக அனுதாபத்தோடும், அவர்கள் நிலை குறித்து மனம் திறந்து பேசுவதாகவும் பேராசிரியர் லயோலா கல்லூரி ஊடகவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்தார்.

ஆட்சிக்காக அனுசரித்துப் போகிறார் கருணாநிதி ..

தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தயவு தேவை என்று அந்த கட்சியை பகைத்துக் கொள்ளாமல் திமுக அனுசரித்துப் போவதாக 70.5 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

ஆட்சி பயத்தை விடுத்து துணிச்சலுடன் கருணாநிதி செயல்பட வேண்டும் என்று 71 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒருவேளை ஆட்சியை இழந்தால் மீண்டும் கருணாநிதி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளை மன்னிக்க வேண்டும் ...

காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் மக்களின் எதிர்பார்ப்பு குறித்த கேள்விக்கு இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்களை மன்னித்தது போல விடுதலைப்புலிகளையும் மன்னிக்க வேண்டுமென்று 66 சதவீதம் பேரும், சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று 22 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சனைதான் தமிழ்நாட்டில் முதல் இடம் வகிக்கும் என்று 30 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் செயல்பாடுகள் இலங்கை அரசை ஆதரிப்பதாகவே உள்ளது என்று 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசு இலங்கைக்கு போர் தளவாடங்களையும், ராணுவப் பயிற்சியையும் வழங்குவதை நிறுத்த வேண்டுமென்று 49 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

ஆளுங்கட்சிக்கு சிக்கல் ஏற்படும் ...

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை பிரச்சனை முக்கிய இடத்தை பெற்றால் அதன் வெளிப்பாடு ஆளும் கட்சிகளுக்கு எதிராகவே அமையும் என்று 68 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 39 சதவீதம் பாதிப்பு ஏற்படும் என்றும், மத்தியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 24.5 சதவீத எதிர்ப்பும், திமுகவுக்கு 21 சதவீத எதிர்ப்பும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.

விடுதலைப்புலிகளை முழுவதுமாக ஒடுக்கும் வரை போரை தொடர வேண்டுமென்று வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பகுதிக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று 21 சதவீதம் பேரும், அமைதி தீர்வு காண்பதற்கு அனைத்து தமிழர் அமைப்புகளோடும் பேச்சு நடத்த வேண்டுமென்று 56 சதவீதம் பேரும், விடுதலைப்புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று 27 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

தமிழக அரசியல் கட்சிகள் எடுத்துள்ள முயற்சிகள் காரணமாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் உருவாகியிருப்பதாக 43 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெடுமாறன் அமைப்புக்கு ஆதரவு …

இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு உண்மையான அக்கறை இல்லை என்று 52சதவீதம் பேரும், இதில் பெரிதும் அக்கறை உள்ள அமைப்பு தமிழர் தேசிய இயக்கம் என்று 12 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெரிதும் அக்கறை உள்ள கட்சிகளாக மதிமுகவுக்கு 9.5 சதவீதம் பேரும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6.5 சதவீதம் பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சதவீதம் பேரும், திமுக 4 சதவீதம் பேரும், பாமகவுக்கு 3 சதவீதம் பேரும், காங்கிரஸ் 2.5 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 2 சதவீதம் பேரும், தேமுதிக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

Source & Thanks : .aol.in

Leave a Reply

Your email address will not be published.