உலகின் விலை உயர்ந்த பட்டுச்சேலை வாடிக்கையாளர் பார்வைக்கு வைப்பு

கரூர்: “உலகின் மிக விலை உயர்ந்த பட்டு சேலை’ என கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு பெற்றுள்ள ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலை, கரூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

முதன்மை மேலாளர் அனந்தகுமார், மேலாளர் சந்தானம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனமான சென்னை சில்க்ஸ் தனித்தன்மையுடன் வடிவமைத்து அணிகலன்களை இணைத்து சொந்த கைத்தறியில் இரட்டை வார்ப்பு முறையில் தயாரிக்கப்பட்ட முதல் பட்டு சேலை. பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வைரம், மாணிக்கம், முத்து, பவிழம், புஷ்பராகம், நீலம், மஞ்சள், பச்சைகல், மரகதம் போன்ற விலை உயர்ந்த ஆபரண கல் இணைத்து புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களில் உள்ள பெண்களின் உருவத்தை நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. ராஜா ரவிவர்மாவுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக அவருடைய 11 ஓவியங்கள் சேலையில் சேர்க்கப்பட்டுள்ளது. முந்தாணியில், “பெண் இசைக்கலைஞர்’ ஓவியமும், சேலையின் இருபுறமும் 10 மற்ற ஓவியங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் விலை உயர்ந்த பட்டு சேலை தயாரிக்க நாலாயிரத்து 680 மணிநேரம் தேவைப்பட்டுள்ளது. 2008 கின்னஸ் சாதனை புத்தகத்தில் “உலகின் மிக விலையுயர்ந்த பட்டு சேலை’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. லிம்கா சாதனை புத்தகத்தில், உலகின் விலை உயர்ந்த சேலை, 12 விதமான உலோகம் மற்றும் கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டு சேலை, ஒரே சேலையில் 11 விதமான ரவிவர்மா ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது என மூன்று இனங்களில் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் நிறுவனங்களில் கிளைகளில் வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்படும் வரிசையில், தற்போது கரூர் கிளையில் வைக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.