வீட்டுக் காவலில் இதுவரை இருந்த அணு விஞ்ஞானி கானுக்கு சுதந்திரம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதிர் கான் சுதந்திரமான மனிதர். எந்தவிதமான தடையும் இல்லாமல் அவர் நாட்டுக்குள் உலா வரலாம் என, பாகிஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அணு ஆயுத ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டவர் பாக்., அணு விஞ்ஞானி அப்துல்காதிர் கான். இவர், 2004ம் ஆண்டு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

சமீப நாட்களாக அவருக்கு எதிரான கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டன. தற்போது அவர் தினசரி பத்திரிகை ஒன்றில் கட்டுரையும் எழுதி வருகிறார். இந்நிலையில், தனக்கு எதிராக அரசு விதித்துள்ள மற்ற கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் எனக் கோரி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் அப்துல்காதிர் கான் மனு தாக்கல் செய்தார்.

அவரின் மனுவை விசாரித்த ஐகோர்ட் கூறியதாவது: அணு விஞ்ஞானி அப்துல்காதிர் கான் சுதந்திரமான மனிதர். அதேநேரத்தில், சில பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டும். அவர் பாகிஸ்தானுக்குள் சுதந்திரமாக உலா வரலாம். அத்துடன் ஆராய்ச்சிக்காக அறிவியல் அறக்கட்டளைக்கும் செல்லலாம். மேலும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் அவரைச் சந்திக்கலாம். இவ்வாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இருந்தாலும், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக அப்துல்காதிர் கானுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்துல்காதிர் கான் இதுபற்றி கூறுகையில், “நான் சுதந்திரமான மனிதன் ஆகிவிட்ட தகவலை தொலைக்காட்சி சேனல்கள் மூலம் அறிந்து கொண்டேன். நான் இப்போது சுதந்திரமான குடிமகன்’ என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.