500 ரூபாய்க்கு லேப்-டாப்: ஆறு மாதத்தில் அமல்

புதுடில்லி: எல்லாருக்கும் கம்ப்யூட்டர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இன்னும் ஆறு மாதத்தில் நாடு முழுவதிலும் உள்ள 20 ஆயிரம் கல்வி நிறுவனங்களுக்கு,. 500 ரூபாயில் ‘லேப்-டாப்’ கம்ப்யூட்டர் வழங்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

ஆரம்பக்கல்வியில் இருந்து மேல்நிலைக்கல்வி வரை படிப் போர் எண்ணிக்கை இன்னும் கணிசமான சதவீதத்தை நாம் எட்டவில்லை; மேலும், நகர்ப்புறங்களில், பரவிய அளவுக்கு கம்ப்யூட்டர் கல்வி அறிவு கிராமங்களில் பரவவில்லை. இதனால், எல்லாருக்கும் சமமான கல்வியை தரவும், கம்ப்யூட்டர் கல்வி இடைவெளியை போக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் 2012 திட்ட காலத்திற்குள் மேனிலைக்கல்வி எட்டுவோர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது; மேலும், எல்லாருக்கும் கம்ப்யூட்டர், நெட்வொர்க் கல்வி வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தேசிய கல்வி ஊக்குவிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் ஒரு கட்டமாகத்தான், தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்ப திட்டம் ஏற்படுத்தப்பட்டது. எல்லா கல்வி நிறுவனங்களும் கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொடர்புடன் கூடியவகையில், இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் இதன் குறிக்கோள். மத்திய, மாநில அரசுகளால், தனியாரால் நடத்தப்படும் 20 ஆயிரம் பள்ளிகளில் கம்ப்யூட்டர் இன்டர்நெட் வசதி இல்லை. சில பள்ளிகளில் பெயருக்கு கூட கம்ப்யூட்டர் இல்லை. கம்ப்யூட்டர் கல்வி அறியாமையை போக்க, மலிவு விலை கம்ப்யூட்டர் சப்ளை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கம்ப்யூட்டர் தருவதுடன், அதில், விரிவுபடுத்தப்பட்ட மெமரி, லான், வை – பீ போன்ற நெட் வசதிகளுடன் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான எலக்ட்ரானிக் சாதன தொழில்நுட்பத்தை பெங்களூரு நகரில் உள்ள இந்திய இன்ஸ்ட்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.,யும் ஆராய்ந்து இறுதிக்கட்டத்துக்கு வந்துள் ளது. இந்த நிறுவனங்களின் தொழில்நுட்பம் இறுதியாக்கப்பட்டதும், இதன் அடிப்படையில், லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரித்து 500 ரூபாயில் விற்பனை செய்யும் பொறுப்பை தனியார் ஏஜன்சிகளிடம் விடப்படும். இவ்வளவும் ஆறு மாதங்களில் செயல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘எல்லாருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்ததன் நோக்கமே, மேனிலைக்கல்வி வரை படித்து வேலை வாய்ப்பு பெற கம்ப்யூட்டர் கல்வி தேவை. அதை அளித்தால், மேனிலைக்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 சதவீதமாவது அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தனர். திருப்பதியில் நடந்த மத்திய அரசின் கம்ப்யூட்டர் கல்வி ஊக்குவிப்பு திட்ட விழாவில், இந்த 500 ரூபாய் ‘லேப்-டாப்’ கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப் பட்டது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.