புலிகளின் முகாம் சாலை பிடிபட்டது: ராணுவம்

கொழும்பு: விடுதலைப் புலிகளின் கடைசி மற்றும் முக்கிய முகாமான சாலையைப் பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், விசுவமடுவின் கிழக்கு பகுதியில் இருந்து முன்னேறி வரும் ராணுவத்தின் 57-வது படைப்பரிவு, தேரவில்குளம் பகுதியில் பரந்தன்-முல்லைத்தீவு பிரதான சாலையை யொட்டி அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் `ராதா ரெஜிமெண்ட்’ படைப்பிரிவின் முக்கிய பயிற்சி முகாமை நேற்று காலை கைப்பற்றியது.

இது விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு தலைமையகமாக விளங்கி வந்தது. மேலும், ரத்தினம் என்பவர் தலைமையில் செயல்பட்டு வந்த ராதா ரெஜிபெண்ட் படைப்பிரிவு பிரபாகரனுக்கு பாதுகாப்பு அளித்து வந்தது. வான்வெளி பாதுகாப்பு, புலனாய்வு பணி ஆகியவற்றில் அந்த படைப்பிரிவு ஈடுபட்டதாக ராணுவத் தகவல் கூறுகிறது.

ராணுவத்தினர் அங்கு செல்வதற்கு சற்று முன், போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் மற்றும் ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் அங்கேயே விட்டுச் சென்றதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன

இதற்கிடையே, போர் நடைபெற்று வரும் பகுதியில் இருந்து இலங்கை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு பகுதிக்கு கடந்த சில நாட்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் வந்து இருப்பதாகவும், நேற்று மட்டும் 600 பேர் வந்ததாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கரா கூறியுள்ளார். மேலும் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பகுதிக்கு வர காத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

விசுவமடுவை கைப்பற்றிய ராணுவம், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரான புதுக்குடியிருப்பை தற்போது முற்றுகையிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.