செஞ்சிலுவை சர்வதேசக் குழுவை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு அரசுக்கு விமல் வீரவன்ஸ வேண்டுகோள்

செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல் கஸ்ட்டெலா புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டியிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, போல் கஸ்ட்டெலாவையும் செஞ்சிலுவை சர்வதேசக் குழுவையும் உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேற்றுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சித் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு:

பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்து அவர்களின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்காக எமது படையினர் போராடிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நாடுகள் எமது நாட்டுக்கு எதிராகச் சதிமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஒருபுறம் இணைத்தலைமை நாடுகள் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுகின்றன. மறுபுறம் சில சர்வதேச அமைப்புகள் புலிகளைக் காப்பாற்றிவிட முற்படுகின்றன.

அந்த வகையில் செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல் கஸ்ட்டெலா புலிகளுக்கு ஆதரவான வகையிலும் எமது படையினருக்கு எதிரான வகையிலும் அறிக்கைகளை வெளியிடுகின்றார்.

வன்னி மக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்று அவர் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார். அவரது கூற்றில் எந்த உண்மையுமில்லை. எமது படையினர் புலிகளின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றவே யுத்தம் செய்கின்றனர். அவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.

ஆனால், போல் கஸ்ட்டெலா ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை படையினர் மீது சுமத்துகின்றார். அவர் புலிகளுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார். அவ்வாறான ஒருவரை நாட்டில் வைத்திருக்கக்கூடாது. அரசு அவரை உடனடியாக நாட்டிலிருந்து அனுப்பவேண்டும்.

அத்தோடு செஞ்சிலுவை சர்வதேசக் குழுவையும் இங்கிருந்து விரட்டிவிடவேண்டும். எமது மக்களுக்கு எமது அரசு போதுமான உதவிகளைச் செய்துவருகிறது என்றார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.