”பழிவாங்கும் நேரம் இதுவல்ல” கருணாநிதிக்கு கடிதம் எழுதும் புலிகள்?

ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால், வழக்கம் போலவே புலிகளின் சகோதர யுத்தத்தைக் குத்திக்காட்டிய கையோடு, இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் தன் ஆதரவு உண்டு என்று காட்டுவதற்காக போராட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

அதிலும் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை ‘சர்வாதிகாரி’ என்றும் சகோதர யுத்தம் நடத்துபவராகவும், அமிர்தலிங்கம் கொலைக்குக்
காரணமானவராகவும் குறிப்பிட்டு கருணாநிதி பேசியிருப்பது விடுதலைப் புலிகள் தரப்பை அதிர வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, புலிகளும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கத் தயாராகி விட்டார்களாம்.

இது குறித்து புலிகள் தரப்பிடம் பேசியபோது,

”மூதறிஞர் கலைஞரைப் பற்றி தலைவர் (பிரபாகரன்) இது நாள் வரை எந்தவிதக் கருத்தும் சொன்னதில்லை. ஆனால், கலைஞர் சமீபத்தில் போர் பற்றி கருத்துக் கூறும்போதெல்லாம் ‘சகோதர யுத்தம்’ பற்றி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். ஆரம்பத்தில், எங்கள் இயக்கத்தின் மீதான அக்கறையால்தான் கலைஞர் இப்படிப் பேசுகிறார் என நினைத்தோம்.

ஆனால், சிங்கள இராணுவத்துக்கான போர் உக்கிரமாகி அப்பாவித் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலிலும், எங்கள் இயக்கத்தைப் பற்றிய பழங்கதைகளைச் சொல்லி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

எங்களின் வசமிருந்த அனைத்துப் பகுதிகளையும் இழந்துவிட்டாலும், இனவெறி பிடித்த சிங்கள இராணுவத்தை எதிர்க்கும் உறுதியை இதுநாள் வரை நாங்கள் இழக்கவில்லை. கலைஞரைப் போன்ற தமிழினத் தலைவர்கள் எங்கள் போராட்டங்களுக்கு ஒன்றுபட்டுக் கைகொடுக்க வேண்டிய நேரமிது. செத்து மடியும் தமிழர்களைக் காப்பாற்றத் தமிழினத் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து சிங்கள அரசின் செவிகளில் எச்சரிக்கை மணியடித்து அறைய வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஆனால், எங்கள் அமைப்பைப் பற்றியும் தலைவரைப் பற்றியும் பலவீனப்படுத்தும் விதமான விமர்சனங்களைக் கிளப்பி நோகடிக்கச் செய்வதை கொஞ்சமும் தாங்கிக்கொள்ள இயலவில்லை. எங்கள் தலைவர், முதல்வர் கலைஞருக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதும் முடிவில் இருக்கிறார். யார் மூலமாகவாவது விரைவிலேயே அந்தக் கடிதம் கலைஞரின் கைகளைச் சென்றடையும்.

அப்போது எங்கள் தலைவர் மீதான மொத்த வருத்தங்களும் கலைஞரின் மனதிலிருந்து நீங்கிவிடும் என நம்புகிறோம்…” என்றவர்களிடம், ”அந்தக் கடிதத்தின் சாரமென்ன?” என்று கேட்டோம்.

நீண்ட தயக்கத்துக்குப் பின், அந்தக் கடிதத்தில் பிரபாகரனின் எழுத்துகளாகப் பதிவாகக்கூடிய எண்ணங்களைப் பற்றிய தங்கள் ஊகங்களை வெளிப்படுத்தினார்கள். அது இதுதானாம்.

‘எங்களின் போராட்டத்துக்கு உங்களின் உறுதுணையும் பக்கபலமும் பெரிதாகத் கிடைக்கும் என்று நாங்கள் எண்ணி இருந்தோம். ஆனால், கூட்டணி குறித்த சங்கடங்களை உணர்ந்து உங்களுக்கு எவ்வித இக்கட்டுகளையும் ஏற்படுத்திவிடக் கூடாது என நினைத்தோம்.

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு, ஒரு வருடத்துக்கு முன்பே எங்களுக்குத் தெரியும். சிங்கள அரசுடன் கைகோத்திருக்கும், அத்தனை சக்திகளைப் பற்றிய செய்திகளும் எங்கள் கவனத்துக்கு அப்போதே வந்தன. ஆனால், தமிழர்களுக்கோ புலிகளுக்கோ எதிராக உங்களை எந்த சக்தியும் திருப்பிவிட முடியாது என உறுதியாக நம்பினோம். இப்போதும் நம்புகிறோம்!

சில சமயங்களில் சகோதர யுத்தத்தை நாங்கள் விரும்பிச் செய்யவில்லை. சுதந்திர வேட்கையோடு போராடும் எங்கள் இயக்கத்தின் இக்கட்டுகளையும், சிலரால் நாங்கள் அனுபவித்த நெருக்கடிகளையும் வெளிப்படையாக விளக்கிச் சொல்லும் நிலையில் அந்த சூழ்நிலைகளில் நாங்கள் இல்லை. ஆனால், எங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலமாக எங்கள் தரப்பு நியாயங்கள் உங்களின் செவிகளை எட்டி இருக்கும் என்றே நம்பினோம்.

என்ன காரணத்தாலோ தெரியவில்லை. எங்களைச் சிறுமைப்படுத்தும் விதமாக செயற்குழுவில் பேசி இருக்கிறீர்கள். வன்னி காடுகளுக்குள் வாழும் தமிழர்களுக்காகக் கடுகளவும் உறக்கமின்றிப் போராடிக்கொண்டிருக்கும் எங்களை உங்கள் பேச்சு எந்தளவுக்கு வருத்தி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

கடந்த பத்தாண்டு கால இயக்க நிகழ்வுகளில் சகோதர யுத்தங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா? கருணா எங்களுக்கு எதிராக மாறி, சிங்கள அரசின் செல்லப்பிள்ளையாக உருவெடுக்கப்போகிறார் என்று எங்கள் உளவுப்பிரிவு முன்கூட்டியே சொன்னது. நிதானமாக அவரை விசாரிக்கலாம் என்று நினைத்தோம். அந்தப் பொறுமைக்கான பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறோம்.

சிங்கள இராணுவம் காட்டுமிராண்டித்தனமான போர்த் தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும் சூழலிலும், நியாயமான போர் மரபுகளையே எங்கள் தரப்பில் நாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அப்பாவி சிங்கள மக்கள் மீது இன்றளவிலும் தாக்குதல் எதையும் நாங்கள் நடத்தவில்லை. உயிருடன் எங்களிடம் பிடிபட்ட சிங்கள வீரர்களை எல்லாம் கௌரவமாக ஒப்படைத்திருக்கிறோம். இறந்த வீரர்களை செஞ்சிலுவை சங்கம் மூலமாக ஒப்படைத்து வருகிறோம்.

தமிழ் மக்களை எங்களின் கேடயமாக நாங்கள் பயன்படுத்துவதாக சிலர் பரப்பிவிட்ட பொய்களுக்கு, செஞ்சிலுவை சங்கத்தினரே தக்க பதிலைச் சொல்லிவிட்டார்கள். இப்போதும் கெரில்லா போர் முறைகளைப் பின்பற்றுகிற எண்ணமின்றி, இராணுவக் கட்டமைப்புடன் போராடி வருகிறோம். இதனால்தான் உலகநாடுகளின் கவனம் எங்கள் போராட்டத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, நோர்வே மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், ‘சிங்கள அரசும் புலிகளும் ஆயுதங்களை வைத்துவிட்டு அரசியல்ரீதியாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்!’ என்று கண்டித்தும்கூட, ‘கிளஸ்டர்’ மற்றும் ‘பொஸ்பரஸ்’ குண்டுகளை எங்கள் இன மக்கள் மீது ஈவிரக்கமின்றி பொழிந்து கொண்டிருக்கிறது சிங்கள இராணுவம்.

போர் மரபுகளை காலில் போட்டு மிதிக்கும் சிங்கள அரசின் இன அழிப்பு வெறியும் இப்போது மெள்ள உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது. எங்களின் சுதந்திரப்போர் நல்லதொரு தீர்வைக் கொடுக்கவிருக்கும் வேளையில், எங்கள் மீதான வருத்தங்களை மறந்து, எங்கள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

எத்தகைய நெருக்கடிகளையும் இக்கட்டுகளையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும் எங்களுக்குக் கைகொடுக்கும் மொத்தத் தமிழ் சமூகத்துக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்!’

இந்த வாதங்கள் மற்றும் விளக்கங்களின் அடிப்படையில் கடிதம் நீளுமென்று கூறப்படுகிறது. இந்த விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்வோர்,

”இது கலைஞரின் மனத்தை முழுமையாக மாற்றும் என்று நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் தமிழகத் தலைவர்களின் மூலமாகத்தான் கலைஞரிடம் அந்தக் கடிதத்தை சேர்க்கப் போகிறார்கள்…” என்றும் சொன்னார்கள்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.