டென்மார்க் நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி: 4 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு

ஈழத் தமிழர்களின் சுதந்திரம் ஆங்கிலேயரால் சிங்கள அரசிடம் தாரைவார்த்து கொடுக்கப்பட்ட கறுப்பு நாளான பெப்ரவரி 4 இல் டென்மார்க்கின் தலைநகரமான கொப்பன்கேகனில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

இந்த வகையில் கடந்த புதன்கிழமை (04.02.09) முற்பகல் 11:30 நிமிடமளவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொப்பன்கேகன் நகர சபைப் பகுதியில் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பியபடி பெரும் பேரணியாக நாடாளுமன்றத்தை சென்றடைந்தனர்.

இதில் முன்னாள் சமூக ஜனநாயக கட்சியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மோன்ஸ் லுக்கரொப்ற் அவர்களும், மற்றும் சமூக மக்கள் கட்சியின் வெளிவிவகார அரசியல் நிறைவேற்று அதிகாரி சிறீன் கேத ஆகியோரும் கலந்து கொண்டதுடன் உரையாற்றியும் உள்ளனர்.

தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் எமது பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதாகவும் உறுதிமொழி வழங்கினர்.

பேரணி நாடாளுமன்றத்தை சென்றடைவதற்கு முன்னதாக டெனிஸ் காவல்துறையினரால் பலத்த பாதுகாப்புக்கள் போடப்பட்ட நிலையிலும் எமது இளைஞர்கள் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியையும் சிறிலங்கா தேசியக் கொடியையும் வீதிகளிலும் இந்திய தூதரகம் முன்பாகவும் எரித்து தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.