வவுனியா- மன்னார் பகுதிகளில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

வவுனியா, மன்னார் பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

செட்டிக்குளம் கிறிஸ்தவகுளம் பகுதியில் நேற்று முன்நாள் வியாழக்கிழமை காலை 7:30 நிமிடமளவில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இருவரும் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது இவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இவர்களின் உடலங்கள் பின்னர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற படையினரும் காவல்துறையினரும் அங்கு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலை நடத்தியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் நேற்று முன்நாள் மாலை இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது உடலம் பின்னர் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர் நிசாந்தன் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது உடலம் பின்னர் வவுனியா மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனிடையே, வவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வீதியோரத்தில் குப்பை மேட்டுக்கு அருகில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இவரது உடலம் பின்னர் வவுனியா மருத்துவமனையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, மன்னார் கீரிப் பகுதியில் நேற்று முன்நாள் வியாழக்கிழமை மைதானத்தில் விளைாயடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை அங்கு வாகனம் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

மன்னார் – தாழ்வுப்பாடு வீதியில் மன்னார் நகருக்கு வெளியே உள்ள கீரிப் பகுதியில் நேற்று முன்நாள் மாலை 5.30 நிமிடமளவில் இச்சம்பவம் நடைபெற்றது.

இந்த மைதானத்தில் இளைஞர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்த போது பிக்கப் வாகனம் ஒன்றில் அங்கு நால்வர் வந்துள்ளனர்.

அவர்களும் இந்த இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடுவது போன்று விளையாடிக்கொண்டு அங்கு ஏற்கனவே விளையாடிக் கொண்டிருந்த இளைஞனைப் பிடித்து அவரை இழுத்துச் சென்று தாங்கள் வந்த பிக்கப்பில் ஏற்ற முற்பட்ட போது அந்த இளைஞன் அவர்களுடன் மல்லுக்கட்டவே அவர் அணிந்திருந்த ரி-சேர்ட் கிழிந்து போய் உள்ளது.

இதனையடுத்த, அந்த இளைஞன் அவர்களிடம் இருந்து விடுபட்டு தப்பியோடிய போது அவர்களில் ஒருவர் தன்வசம் இருந்த பிஸ்டலை எடுத்து தப்பியோடிய இளைஞன் மீது பல தடவைகள் சுட்டுள்ளார்.

அதில் மூன்று குண்டு அந்த இளைஞன் மீது பாயவே அவர் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த நால்வரும் தாங்கள் வந்த பிக்கப்பில் ஏறி மீண்டும் மன்னார் நகர்ப் பக்கமாக சென்று விட்டனர்.

மரண விசாரணையின் பின்னர் இளைஞனின் உடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொல்லப்பட்டவர், மன்னார் நாகதாழ்வு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து பெரியகமம் எழுத்தூர் பகுதியில் வசித்து வந்த பத்திநாதன் தவசீலன் (வயது 25) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.

ஆதாரம்: தினக்குரல்

Source & Thanks : puthinam :

Leave a Reply

Your email address will not be published.