தமிழ் மக்களின் பாதுகாப்பை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும்: சிறப்பு பிரதிநிதியிடம் த.தே.கூ. வலியுறுத்தல்

தமிழின படுகொலையில் ஈடுபடும் சிறிலங்கா அரசாங்கத்தையும் அதன் படைகளையும் நம்பி இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்குவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனின் சிறப்பு பிரதிநிதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு எடுத்துக்கூறியுள்ளது.

அனைத்துலக குழு ஒன்றை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

கொழும்புக்கு சென்றுள்ள ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராம்ரட் சாமுவேலை இன்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடிய போதே கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு பிரதி தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் கூட்டமைப்பின் அமைப்பாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராம்ரட் சாமுவேலுடன் கொழும்புக்கான வதிவிட பிரதி நிதி நீல்பகுனேயுடன் ஐ.நா. அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராம்ரட் சாமுவேலிடம் விளக்கி கூறிய விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வவுனியாவில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த இளைஞர்கள் இளம் குடும்பஸ்த்தர்கள் மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானனோர் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கைதாகி பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர். வேறு சிலர் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் அரசாங்கம் அமைத்துள்ள முகாம்களில் பொதுமக்கள் எவ்வாறு தங்க முடியும்? எனவே ஐ.நா.வின் மேற்பார்வையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் அப்போதுதான் போர் நடைபெறும் பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேறி வருவார்கள்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் மக்கள் விரைவில் மீள குடியமர்த்தப்பட வேண்டும். வேறு முகாம்களில் குடியமர்த்தி அடிமைகளாக வைத்திருப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது.

ஆகவே, ஐ.நா. அதற்கு இடமளிக்கக்கூடாது. போர் நடைபெற்று கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதிகளில் இருந்து நேற்று வெளியேறி வந்த இளைஞர்கள், பெண்கள் பலர் சூனிய பிரதேசங்களில் வைத்து படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு வெளியேறி வந்தவர்களில் குழந்தைகள், வயோதிபர்கள், சிறுவர்கள் மாத்திரமே வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பாதுகாப்பாக கொண்டு வந்ததாக அரசாங்கம் பொய்யான பிரசாரத்தில் ஈடுபடுகின்றது.

ஆகவே, இந்த இனப் படுகொலையை அனைத்துலகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் தடுத்து நிறுத்த உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பாதுகாப்பை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, போரில் மக்கள் கொல்லப்படுகின்றமை தொடர்பான உண்மை தகவல்களை வெளியே கொண்டு வரும் ஊடகவிலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர் என்பது குறித்து விளக்கியதாகவும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் கூறினர்.

அதேவேளை, தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலைமை தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் எடுத்து கூறி மக்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதிநிதி ராம்ரட் சாமுவேல் உறுதியளித்ததாக கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.