வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 5 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கைது

வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களில் 5 பெண்கள் உட்பட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களாக வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களில் பலர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அதன் போதே 12 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, வவுனியா நெலுக்குளம் படை முகாமில் 25 பெண்கள் உட்பட 95 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் வன்னியில் இருந்து நோயாளர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளின் பாதுகாப்பில் வவுனியாவுக்கு வந்த போதே ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டதகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, வன்னியில் இருந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் சென்று பார்வையிட முடியாதவாறு படையினர் தடை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.