போரை நிறுத்த கோரும் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியோம்: பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு

போரை நிறுத்தக் கோரும் எந்தவொரு அழுத்தத்திற்காகவும் அரசாங்கம் அடிபணிந்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த மாட்டாது என்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, நேற்று பாராளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணையை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவே அரசின் இந்த நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக அறிவித்தார்.

அப்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:

ஆயுதங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த சிலர் இப்போது ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை வைத்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் இப்போது கிழக்கின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்கின்றனர்.

வடக்கிலும் இதேநிலைமை ஏற்படவேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். இந்த நிலைமையை ஏற்படுத்தவே எமது படையினர், இப்போது போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் புலிகளின் கோட்டைகளை யெல்லாம் தகர்த்து புலியின் குகையின் நுழைவாயிலில் நின்று சவால் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இதனால், புலிகள் இப்போது போக்கிடம் இன்றிக் கஷ்டப்படுகின்றனர். இந்த யுத்த நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துக்கொண்டு புலிகளை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒரு பொது இணக்கப்பாட்டின் கீழ் ஒன்று சேர அழைப்பு விடுத்திருக்கிறோம்.

சிலர் இந்த அழைப்பை ஏற்றதோடு, சிலர் அதை நிராகரித்துவிட்டுப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படத் தொடங்கினர். ஆனால், இந்த நாட்டு மக்கள் அனைவரும் பயங்கரவாதத்தின் ஆபத்தை உணர்ந்து எமது நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

மக்கள் இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகவுள்ளனர். புலிகள் தோற்கடிக்கப்படும் போதெல்லாம் மக்கள் வீதியில் இறங்கி மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

புலிகளின் போராட்டம் தோல்வியைத் தழுவக்கூடியது என்பதைப் புலிகள் உணரவேண்டும். புலிகளில் சிலர் அரசிடம் சரணடையப் போகின்றனர் என்று அண்மையில் சில ஊடகங்கள் தெரிவித்தன.

புலிகள் அவ்வாறு சரணடைவது மிகவும் அறிவு பூர்வமான தீர்மானமாகும். அவ்வாறு சரணடைந்தால் நாம் அவர்களை மிகவும் கௌரவமாக வரவேற்போம் என்றார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.