ஜனவரி 26 முதல் பெப்ரவரி 2ம் திகதி வரை வன்னியில் 733 அப்பாவிமக்கள் பலி; 2615 பேர் காயம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி. தகவல்

வன்னியில் ஜனவரி 26ம் திகதி முதல் பெப்ரவரி 2ம்திகதி வரையான காலப்பகுதிக்குள் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுக்கள் மற்றும் பீரங்கி, எறிகணைத் தாக்குதல்களினாலும் 733 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 2615 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான ஆதாரங்கள் புள்ளிவிபரங்கள் எம்மிடம் உள்ளன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரையும் அரசாங்கம் புலிகள் என்று கூறிவருவது கடைந்தெடுத்த பொய்யாகும்.

எதிர்காலத்தில் சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழனின் மனதையும் சிதைத்துக்கொண்டிருக்கின்றது இந்த அரசாங்கம்.

கடந்த 26ம் திகதி காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையில் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 302 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 985 பேர் படுகாயமடைந்தனர்.

3ம் திகதி மாத்திரம் 5000 எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதலில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பாரிய சேதத்திற்று உள்ளானதுடன் அங்கு 53 பேர் கொல்லப்பட்டு 82 பேர் படுகாயமடைந்தனர். இதில் தாதி ஒருவரும் 11 நோயாளிகளும் அடங்குவர்.

இச்சம்பவம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அங்கு கொல்லப்பட்டவர்கள் புலிகள் என்றும் அது இராணுவ இலக்கு என்றும் கூறுகின்றார். அவர் கூறுவது போல அந்த வைத்தியசாலையில் புலிகள்தான் சிகிச்சைபெற்று வந்திருந்தாலும் கூட வைத்தியசாலைகள் யுத்த தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்று சர்வதேச பாதுகாப்புச் சட்டம் ஒன்று இருக்கின்றது என்ற பொறுப்பு இருக்கவேண்டும்.

பாதுகாப்புச் செயலாளரின் கூற்றுப்படி பார்ப்போமென்றால் வவுனியா, அநுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மீது புலிகள் தமது இலக்குகளாகக்கொண்டு தாக்குதலை மேற்கொள்வார்களேயானால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சிநிதித்து பார்க்கவேண்டும்.

இது இவ்வாறிருக்க வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் பாலித ஹோகன்ன அவர்கள் அவ்வாறு வைத்தியசாலையில் தாக்குதல் எவையும் நடத்தப்படவே இல்லை என்கிறார். இது எப்படிப்பட்ட கபட நோக்கு என்பது தெளிவாகின்றது.

இதேவேளை தற்போது சர்வகட்சிக்குழுவின் தீர்வு யோசனைகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகின்றது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் என்பது தமிழ்மக்களை பொறுத்தமட்டில் காலம் கடந்த திட்டமாகும்.

எம்மைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லீம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற தீர்வாகவே எதுவும் அமையவேண்டும். அவ்வாறு இல்லாத தீர்வு பொருத்தமானதாக அமையப்போவதில்லை.

எனவே இன்றைய கடைசித் தருணத்திலாவது அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது இயலாத காரியமேயாகும்.என்றார் சுரேஸ் எம்.பி.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.