வரம்பு மீறும் காதலர்களை கண்டதும் ‘சுட’ ராம் சேனா சபதம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் எந்தப் பகுதியிலாவது காதலர் தினத்தன்று வெட்ட வெளியில் ஜோடியாக சுற்றுவது, கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது என காதல் விளையாட்டுக்களில் யாராவது ஈடுபட்டால் அவர்களை தங்கள் வீடியோ, ஸ்டில் கேமராக்களில் ‘சுட்டுத்’ தள்ள மங்களூர் ‘பார் அட்டாக்’ புகழ் ராம்சேனா முடிவு செய்துள்ளது.

அத்தோடு நில்லாமல், காதல் ஜோடிகளை பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைப்பதோடு (‘காதலிப்பது உண்மை என்றால் கல்யாணம் செய்து கொண்டு வீட்டுக்கும் இதையெல்லாம் செய்யட்டும்!’), வீடியோவில் எடுத்த படக் காட்சிகளை தொலைக்காட்சி, இன்டர்நெட்டில் ஒளிபரப்பப்பப் போவதாகவும், மங்களூர் அட்டாக் தொடர்பாக கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்து விட்ட ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவுக்கு சிவசேனா, கர்நாடகத்திற்கு ராம் சேனா என்ற ரேஞ்சுக்கு ராம் சேனா வளர்ந்து வருகிறது.

மங்களூரில் சில தினங்களுக்கு முன் பார் ஒன்றில் மாணவிகள் குடித்துவிட்டு வரம்பு மீறிக் கொண்டிருந்ததைக் கண்டித்து அவர்களை அடித்துத் துரத்தியது இந்து அமைப்பான ராம் சேனா. இதனால் அந்த அமைப்புக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் சரிவிகிதத்தில் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தனது அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது ராம்சேனா.

இந்திய சுதந்திர தினத்தைவிட முக்கியத்துவம் கொடுத்து மீடியாக்களாலும், இளைஞர் சமூகத்தினராலும் கொண்டாடப்பட்டு வரும் இந்தக் காதலர் தினத்தைச் சாக்காக வைத்து வெட்ட வெளியில் விபச்சாரமே நடந்து வருகிறது, என ராம் சேனா குற்றம் சாட்டியுள்ளது.

ஹோட்டல்களில் விடிய விடிய நடனங்கள், மது விருந்து என உலகின் மற்ற நாடுகளைவிட அதிகமாகவே காதலர் தினங்கள் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருவதால் தேசத்தின் காலாச்சாரம் நாறிப் போய்விட்டதாகவும், அதைச் சீர்ப்படுத்தும் முகமாய், கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாய் அறிவித்துள்ளது ராம் சேனா.

‘காதலைக் கொண்டாடுவது தப்பில்லை… ஆனால் அதை நடுத்தெருவில் கட்டிப் பிடித்து, முத்தமிட்டு, குடித்து, கூத்தடித்தபடிதான் கொண்டாட வேண்டுமா?’ என கேள்வி எழுப்பியுள்ள ராம் சேனா, கலாச்சாரத்துக்கு விரோதமான இந்தக் கொண்டாட்டங்களை கர்நாடகாவில் எந்தப் பகுதியிலும் அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதைத் தாண்டி பொது இடங்களில் காதலைக் கொண்டாடும் சாக்கில் யாராவது எல்லைமீறி நடந்தால், அந்த ஜோடிகளை அழைத்துப் போய் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து தாலி கட்டி தம்பதிகளாக்கிவிடுவோம் என்றும், ஒருவேளை பிடிபட்ட பிறகு எந்த ஜோடியாவது அண்ணன் – தங்கை என பொய் சொன்னால், அவர்கள் கையில் ராக்கி கொடுத்து ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டு நிஜமான அண்ணன் தங்கைகளாக்கி விடுவோம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இந்தக் காட்சிகள் அனைத்தையும் வீடியோ காமிரா மற்றும் ஸ்டில் கேமராக்கள் மூலம் பதிவு செய்து உலகமெங்கும் தெரிய வைப்போம் என்றும் அறிவித்துள்ளனர் இந்த அமைப்பினர்.

மேலும் கர்நாடகத்தின் எந்தப் பகுதியிலும் காதலர் தின வாழ்த்து அட்டைகள், பூச்செண்டுகள் மற்றும் பரிசுகளை குறிப்பிட்ட இந்த தினத்தைக் கொண்டாடும் விதத்தில் விற்காமல் தவிர்க்க வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் இந்தக் கொண்டாட்ங்கள் அறவே தடை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் பிரமோத் எச்சரித்துள்ளார்.

ரேணுகா சவுத்ரி கடும் ஆட்சேபம்!

ராம் சேனாவின் இந்த அறிவிப்புக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இத்தகைய செயல்களை கர்நாடக அரசு ஊக்கப்படுத்தக் கூடாது என்றும், இந்தியா போன்றதொரு சுதந்திர, மக்களாட்சி நிலவும் நாட்டில் அனைவரும் அனைத்தையும் கொண்டாடி அனுபவித்து மகிழப் பிறந்தவர்களே என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக காதலர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் பெண்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என கர்நாடக முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

காதலர் தினத்தன்று ராம் சேனாவின் லீலைகளை எப்படி சமாளிப்பது என்பது முதல்வர் எடியூரப்பாவுக்கு பெரும் சவாலாகியுள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.