அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கான் சுதந்திர மனிதர்: பாக். கோர்ட்

இஸ்லாமாபாத்: அணு ஆயுத ரகசியங்களை திருட்டுத்தனமாக விற்று சர்ச்சையில் சிக்கி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு பின்னர் பாகிஸ்தானை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்ட அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான், சுதந்திர மனிதர் என்று பாகிஸ்தான் கோர்ட் அறிவித்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் அவரைக் கட்டுப்படுத்தும் என கோர்ட் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில், கான் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தன் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏ.க்யூ. கான் சுதந்திரமான மனிதர். அவர் விரும்பியபடி செயல்படலாம். இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அவர் உட்பட வேண்டும்.

நாட்டின் எந்தப் பகுதிக்கும் அவர் செல்லலாம். மேலும், அறிவியல் ஆய்வுக் கழகங்களுக்கும் அவர் செல்லலாம். மேலும் தனது நண்பர்கள், உறவினர்களை சந்திப்பதற்கும் அவருக்குத் தடை கிடையாது என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே கோர்ட்டுக்கு வெளியே கானுடன், சமரசம் செய்து கொள்ள பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு பெரிய அளவில் பல நாடுகளுக்கு அணு ரகசியங்களை விற்று பெரும் சர்ச்சையில் சிக்கியவர் கான் என்பது நினைவிருக்கலாம். இவர் அந்நாட்டு அணு விஞ்ஞானத் தந்தை எனவும் வர்ணிக்கப்பட்டவர்.

கோர்ட் உத்தரவு குறித்து கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.