யேர்மனியில் மாபெரும் கண்டனப் பேரணி: 15,000-க்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு

யேர்மனியின் தலைநகர் பேர்லினில் மாபெரும் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி தமிழ் மக்களால் நடத்தப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

– சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்

– இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கிடைக்க யேர்மனிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனக் கோரி தலைநகர் பேர்லினில் இக்கண்டனப் பேரணி நடைபெற்றது.

பேர்லினில் பெருமளவு வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள யேர்மனி ஆளும் கட்சியின் பணியகத்தின் முன்பாக நேற்று முன்நாள் புதன்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் தமிழ் மக்கள் கூடத் தொடங்கினர்.

– சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளை விளக்கும் படங்கள், பதாதைகள் மற்றும் சிவப்பு-மஞ்சள் கொடிகளை தாங்கியவாறும்

– இந்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கி வரும் இராணுவ உதவிகளை நிறுத்தக்கோரும் பதாதைகளை தாங்கியவாறும்

ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடிய தமிழ்மக்கள் பிற்பகல் 1:00 மணியளவில் யேர்மனிய நாடளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

முதலில் நோர்வே மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான மனுக்களை நோர்வே தூதரகத்தில் கையளித்து விட்டு பேரணியாக இந்திய தூதரகம் நோக்கி நகர்ந்து சென்றனர்.

இந்திய தூதரகம் முன்பாக சிறிது நேரம் நின்ற மக்கள் இந்திய தூதுவரிடமும் மனுவொன்றை கையளித்து விட்டு நகர்ந்தனர்.

நகரின் மத்தியில் அமைந்த பிரதான வீதி ஊடாக நகர்ந்த பேரணி, யேர்மனி நாடாளுமன்றத்திற்கு அருகில் இருந்த மைதானத்தை சென்றடைந்தது.

மக்கள் பேரணியாக முழக்கங்களை எழுப்பிய வண்ணம் நிற்க, யேர்மனிய அரச தலைவருக்கான மனு அவரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதனை அடுத்து சிறப்புரைகள் இடம்பெற்றன.

இப்பேரணிக்கு யேர்மனியின் பல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கும் அதிகமான பேருந்துகளில் வந்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.