ஏன் போர் நிறுத்தம் இல்லை? கருணாநிதி விளக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள், செல்வாக்கு தேடிக் கொள்ள முயலுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு, இலங்கையில் ஏன் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்பதை முதல்வர் கருணாநிதி விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துப் பேசுகையில்,

இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பிலும், தமிழக அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதன் பிறகும் அங்கு போர் நிறுத்தம் ஏற்படவில்லை.

இதுவரை அங்கு போர் நிறுத்தம் ஏற்படாததற்கு என்ன காரணம் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும். தி.மு.க. தலைவர் என்ற முறையில் இல்லாமல், மாநிலத்தின் முதல்வர் என்ற தலைமையில் அவரிடம் இருந்து இதற்கான விளக்கத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மத்திய ஆட்சியில் பங்கு பெற்றுள்ள கட்சி என்ற முறையில் போரை நிறுத்துவதற்காக பல முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் நேரிலும், கடிதம் வாயிலாகவும் வலியுறுத்தினோம். மேலும் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணையாக நின்றோம்.

போரை நிறுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முன்முயற்சியை கருணாநிதி எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். 7 கோடி தமிழர்களுக்கு முதல்வர் என்ற முறையிலேயே அவரை முன்னிறுத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என கூறினோம்.

ஆனால் மத்திய அரசுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே விரோதத்தை உண்டாக்கவும், அதன் மூலம் மத்தியில் நான் செல்வாக்கு செலுத்த முயன்றதாகவும் கருணாநிதி கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

மேலும் தி.மு.க. ஆட்சியைக் கலைக்க சதி எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 35 சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ள நிலையில் ஆட்சியைக் கலைக்க எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதையும் கருணாநிதிதான் விளக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.