ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய கருணா திட்டம்?

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான ஜெயம், மார்கன், இனிய பாரதி மற்றும் மங்களம் ஆகியோரும் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடியதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் என்னைத் தொடர்ந்தும் அடையாளப்படுத்திக்கொள்ளப் போவதில்லை. கிழக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய கட்சியில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை. இலங்கையர் என்ற ரீதியில் சிறிய கட்சி வட்டத்திற்குள் அடங்கிச் செயற்படநான் தயாராக இல்லை.

தேசிய ரீதியிலான அரசியலில் ஈடுபடும் நோக்கிலேயே நான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் அரசாங்க அமைச்சுப் பொறுப்பொன்று எனக்குக் கிடைக்கப்பெறலாம்.

திருகோணமலை முதல் அம்பாறை வரையிலான எமது கட்சிக் காரியாலயங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன. ஒரு நாடு மற்றும் ஒரு கட்சி என்ற கொள்கையை கடுமையாகப் பின்பற்றி வருகின்றேன்” என்றார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.