போர் நிறுத்தம் ஏற்படும் வரை ஸ்டிரைக் – வக்கீல்கள் முடிவு

சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் வரை காலவரையின்றி போராட்டத்தைத் தொடர சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கடந்த ஐநது நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நடந்த பொது வேலைநிறுத்தத்தின்போது உயர்நீதிமன்றம் எதிரே உள்ள சைக்கிள் கடை சூறையாடப்பட்டது. அப்போது போலீஸார் வக்கீல்கள் மீது தடியடி நடத்தினர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.

இக்கூட்டம் குறித்து சங்கத் தலைவர் பால். கனகராஜ் கூறுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். வக்கீல்களை தாக்கிய போலீஸார் மன்னிப்பு கோர வேண்டும்.

இந்தக் கோரிக்கைளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

வருகிற 9ம் தேதி மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவுள்ளோம் என்றார்.

தமிழகம் முழுவதும் போராட்டம் நீடிப்பு ..

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் இன்றும் பல ஊர்களில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

மன்னார்குடியில் வேலை நிறுத்தத்தில ஈடுபட்ட வக்கீல்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூரில் கருப்புப் பட்டையுடன் ஊர்வலம் நடத்திய வக்கீல்கள், தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருத்தாச்சலத்தில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சையில் இலங்கை தேசியக் கொடி மற்றும் ராஜபக்சேவின் கொடும்பாவி ஆகியவை எரிக்கப்பட்டன.

2000 மாணவர்கள் சாலை மறியல் ..

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.