சர்வதேச விண்வெளி நிலையம் நாளை வானத்தில் பார்க்கலாம்

விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் வானில் காணலாம். விண்வெளியில் இருந்தபடியே கோள்களைப் பற்றி ஆய்வு செய்யும் பணிக்காக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து, “சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை’ விண்ணில் அமைத்துள்ளன. இந்த ஆய்வு நிலையம், 1998ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ஆய்வு நிலையம், சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றத்தால் அவ்வப்போது வானில் ஒரு நட்சத்திரம் போல பூமியில் நமக்குத் தெரியும்.இந்த வகையில், நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வானில் தெரியும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முதன்மை இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது:

இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை 12 நாடுகள் இணைந்து அமைத்துள்ளன. வானியல் தொலை நோக்கியின் மூலம் ஆய்வுப்பணிகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு மையம், பூமியில் இருந்து 340 கி.மீ., தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆய்வுகளை துல்லியமாக மேற்கொள்ள முடியும்.உலகம் 1,400 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று கூறப்பட்டாலும், இதுகுறித்த ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன. தற்போது விண்ணில் நிறுவப்பட்டுள்ள இந்த ஆய்வு மையத்தின் எடை 90 ஆயிரம் கிலோ. 12.5 மீட்டர் அகலமும், 4.1 மீட்டர் சுற்றளவும் கொண்டது. பூமியில் இருந்து 351 லிருந்து 362 கி.மீ., தொலைவு சுற்றுவட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வு மையம், 15 நாட்களுக்கு ஒரு முறை சிறிய விமானம் வடிவில் பூமியில் தெரியும். அந்த வகையில் நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இது வானில் தெரியும். வடக்கு, வடமேற்கு திசையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும்.சென்னையில் நாளை இரவு 7.07 மணிக்குத் தோன்றி தென்கிழக்கு திசைக்கு 7.13 மணிக்குச் செல்கிறது. அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.28 மணிக்குத் தோன்றி 18.37 மணிக்கு தென் கிழக்கு நோக்கி செல்கிறது.மதுரை, கோவை மற்றும் புதுச்சேரியில் நாளை இரவு 7.10 மணியிலிருந்து 7.13 வரையிலும், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியில் இருந்து 6.36 வரையிலும் இதை வானில் பார்க்க முடியும்.இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.