இலங்கைக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது.

இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது.

இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க வைத்தது. ஆனால் அதற்கு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

தற்போது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. இன்னும் கூட புலிகளிடமிருந்து பதில் இல்லை,.

இரு தரப்பும் போரை நிறுத்தி விட்டுப் பேச முன்வர வேண்டும். இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு கரமும் சேர்ந்தால்தான் ஒலி எழுப்ப முடியும்.

உயிர்கள் அநியாயமாக பறிபோவது மனதுக்கு வேதனையாக உள்ளது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை இந்திய அரசு நிச்சயம் செய்யும் என்றார் சிதம்பரம்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.