கனடிய நாடாளுமன்றம் முன்பாக தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்: 5,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு

கனடாவின் தலைநகரான ஒட்டாவா நாடாளுமன்றத் திடலில் நேற்று தமிழ் மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்ற அதேவேளை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான சிறப்பு விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

சிறிலங்காவின் 61 ஆவது வருட சுதந்திர நாளினை துக்க நாளாக கடைப்பிடித்தும் கனடிய அரசு இலங்கை இனப்பிரச்சினையில் காத்திரமான பங்கை வகிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளை வேண்டியும் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் நேற்று புதன்கிழமை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது.

61 ஆவது சுதந்திர நாளினை துக்க நாளாக கடைப்பிடிக்கும் போராட்டம் ரொறன்ரோ, மொன்றியல், வன்கூவர், ஒட்டாவா மற்றும் வின்னிபெக் நகரங்களில் கடைப்பிடிக்கப்படும் அதேவேளை, கனடிய நாடாளுமன்றம் முன்பான போராட்டம் நேற்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.

5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்த கொண்ட இப்போராட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பான சிறப்பு விவாதம் நடைபெறுவதனையும் அறிவித்தனர்.

லிபரல் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட இந்த சிறப்பு விவாதம் கட்சி பேதமற்ற முறையில் நடைபெற்றதோடு இலங்கை விவகாரத்தில் ஏற்பட்டு சிக்கல் நிலை மற்றும் கடந்த கால சமாதானப் பேச்சுவார்த்தை குறித்த விவகாரங்களை பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் உரைகளில் எடுத்துக்கூறினர்.

அத்தோடு, இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் கனடிய ஊடங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.

இலங்கையின் நிலவரம் தொடர்பாக நேற்று காலை கனடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனன் அறிக்கையினை வெளியிட்டிருந்தார்.

அதில், பேச்சுவார்த்தை மூலமான தீர்வையே வலியுறுத்துவதாகத் தெரிவித்ததோடு புதுக்குடியிருப்பு மருத்துவமனை பகுதியில் நடைபெற்ற தாக்குதலையும் கண்டித்திருந்தார்.

அதேவேளை, தற்போதைய போரினால் அகதிகளாகப்பட்டுள்ள மக்களுக்கு உலக உணவுத் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்குவதற்கும் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சர் பெவ் ஓடா வழங்கியிருந்தார்.

இதேவேளை, பிரதான எதிர்கட்சியான லிபரல் கட்சியின் வெளிவிவகார விடயங்களுக்கு பொறுப்பானவரும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கடந்த காலப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவருமான நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில் வரைந்த கட்டுரையொன்றில் இலங்கையின் இனப் பிரச்சினையை உள்விவகாரம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது தொடர்பான தீர்வில் கனடாவின் பங்களிப்பு தேவை என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கனடாவின் இன்றைய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இலங்கை விவகாரம் தொடர்பான சிறப்பு விவாதம் மாலை 7:00 மணிக்கு தொடங்கியது.

ஓரிரு மணத்தியாலங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த விவாதம் பின்னிரவு 11:30 நிமிடம் வரை தொடர்ந்து சென்றது.

கனடாவின் ஆளும் கட்சி சிறுபான்மை அரசாக இருப்பதால் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பரஸ்பர உறவு நிலை இல்லாத ஒரு நிலையே இருந்து வருகிறது. இருந்த போதும் இலங்கை விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் அரசுடன் ஒத்துச் செயற்படும் நிலை தென்படுவதால் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்கி இந்த விவகாரத்தின் மூலம் எதிர்க்கட்சிகளுடனான நட்புறவான செயற்பாட்டிற்கான ஒரு பரீட்சார்த்தமாகவே கனடிய அரசு கூட இந்த விவாதத்தைத் கையாண்டதாகத் தெரியவருகிறது.

இந்த விவாதத்தின் பின் விளைவாக இனிவரும் நாட்களில் கனடா காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் அல்லது சிறிலங்கா அரசுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.