இந்திய அரசை கண்டித்து நாளை மலேசியாவில் ஒன்று திரளுங்கள்: உலகத் தமிழர் நிவாரண நிதியம் பசுபதி அழைப்பு

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைப் போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையும் வழங்கி இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மலேசியாவில் மாபெரும் கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசைக் கண்டித்து நாளை நடைபெறவிருக்கும் இக்கண்டனப் பேரணியில் மலேசிய தமிழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளாந்தம் ஈழத் தமிழர்கள் படும் தாங்கொணா துன்பங்கள் தொடர்பான செய்திகளைப் பார்க்கும் போது மனம் துடிக்கிறது.

காலம் காலமாய் வாழ்ந்த சொந்த மண்ணில் ஓடி பதுங்குவதற்கு கூட பாதுகாப்பான இடமின்றி நம் தமிழ் உறவுகள் படும் வேதனைகள் சொல்லில் வடிக்க முடியாதது. சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிற இந்த வேளையில் தமிழர்கள் என கூறிக் கொள்ளும் நாம் எதையும் செய்யாமல் விட்டால் வரலாற்றுப் பெரும்பழியை நாம் சுமக்க வேண்டி வரும்.

தொடரும் போரினால் இலங்கை தமிழர்கள் படும் இன்னல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைவதாய் இல்லை.

பல தடவைகள் பாதுகாப்பான இடம் நோக்கி இடம்பெயர்ந்தே தமிழ் மக்கள் களைத்துவிட்டனர். இனியும் அவர்களுக்காய் நாம் குரல் எழுப்பாமல் போனால் அவர்களை யார் காப்பாற்ற முடியும்.

வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும்

இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து மனு வழங்கும் நோக்கிலும்

போரினை உடனே நிறுத்த சிறிலங்கா அரசை வலியுறுத்த வேண்டும்

எனக் கோரி மலேசிய பொது அமைப்புக்கள் நாளை வெள்ளிக்கிழமை (06.02.09) பிற்பகல் 1:00 மணி தொடக்கம் இந்திய தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

குறைந்தது 5 ஆயிரம் பேராவது இப்பேரணியில் கலந்து கொண்டு இந்திய அரசிற்கு மலேசிய மக்கள் தமது கண்டனத்தினை வெளிப்படுத்த வேண்டும் என அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

நூற்றுக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிற வேளையில் அதைத் தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசு மெளனமாய் இருப்பது ஏன்?

ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கும் இந்த போருக்கு இந்திய அரசு துணை போவது ஏன்?

இந்திய நாட்டு வம்சாவளித் தமிழர்களான நமக்கு இந்திய அரசை நோக்கி கேள்வி கேட்க எல்லாவித தகுதியும் இருக்கிறது.

போரின் துன்பத்தினை தொடர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான முறையில் ஆதரவு வழங்குவது தவறாகாது. மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது இன்னொரு சக மனிதன் என்ற முறையில் அதற்காக கண்டனம் தெரிவிப்பது தவறாகாது.

ஈழத் தமிழ் உறவுகள் அங்கே நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகின்ற வேளையில் அவர்களுக்காக கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டியது நமது தார்மீக கடப்பாடு ஆகும்.

நம் தமிழ் உறவுகள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுப்புவது தமிழீழ மக்கள என்றென்றும் தலை நிமிர்ந்து வாழ வழி வகுக்கும்.

நம் உறவுகளின் துயர் துடைக்க நாம் முன்னெடுக்கும் இம்முயற்சி ஈழத்தில் அமைதி மலரச் செய்யும் என நம்பலாம்.

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இப்பேரணியில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புக்கள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணித் திரள வேண்டும் என உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.