> ஈழத்தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகு மூலம் செல்வோம்: தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

ஈழத்தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகு மூலம் செல்வோம்: தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு


இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 9ம் தேதி படகு மூலம் முல்லைத்தீவு செல்லப்போவதாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சுரேஷ் குருசாமி, இணைச் செயலாளர் ராஜாராம், முன்னாள் தலைவர் செங்குட்டுவன் மற்றும் மகேந்திரன், இக்னேஷியஸ், அதிசயகுமார், பூங்குமார், ஆறுமுகவேலன், ஹரிராகவன், வெற்றி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் வக்கீல்கள் சங்கம் ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது மற்றும் 7ம் தேதி நடைபெறும் பேரணியில் பங்கேற்பது, அதன் பிறகும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் வரும் 9ம் தேதி தூத்துக்குடியில் இருந்து படகுகள் மூலம் முல்லைத்தீவு செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் டி.எம்.பிரபு நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழர்கள் வாழும் பகுதியில் கடும் தாக்குதல் நடத்திவருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உலகிற்கு மனிதாபிமானத்தை போதிக்கும் இந்திய அரசு இப்பிரச்னையில் தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது.

இனிமேலும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகாயம் அடைந்துள்ள தமிழர்களை இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
news from Tamil win .by nilaamathy.

Source & Thanks : www.yarl.com

Leave a Reply

Your email address will not be published.