மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் மட்டும் 9ம் தேதி திறப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மட்டும் வருகிற 9ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். ஆங்காங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகரித்தது.

இதையடுத்து கல்லூரிகள் அனைத்தையும் காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மூடப்பட்டன. விடுதிகளும் மூடப்பட்டன.

இதை எதிர்த்து சென்னை சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மார்ச் மாதம் தேர்வு வரவுள்ள நிலையில் இப்படிக் கல்லூரிகளை மூடியிருப்பது படிப்பைக் கெடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையி்ல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மருத்துவம், கால்நடை, விவசாயம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் செயல்படும்.

பிற கல்லூரிகளைத் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.