அமெரிக்காவில் மீண்டும் கொடூரம் இந்திய இன்ஜினியர் சுட்டுக்கொலை

ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்ஜினியர், அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதிர்குமார்(31). இவர் எட்டு வருடங்களுக்கு முன், அமெரிக்க பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்தார். அதன்பின், அட்லாண்டாவில் உள்ள டொயோட்டா நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், சுதிர்குமார் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பணத்திற்காகக் கொல்லப்பட்டிருக்கலாம் என, நம்பப்படுகிறது. இருப்பினும், கொலை பற்றிய முழுமையான விவரங்களும், எப்போது சம்பவம் நடந்தது என்பதும் தெரியவில்லை. இத்தகவலை ஆந்திர மேற்கு கோதாவரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணா கூறினார்.

அமெரிக்காவில், ஆந்திராவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. கடந்த 15 மாதங்களில் எட்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் சாப்ட் வேர் இன்ஜினியராகப் பணியாற்றிய அக்ஷய் விஷால், கடந்த ஜனவரியில் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அர்ப்பணா பி.ஜினாகா என்ற மாணவியும் மர்மமான முறையில் தனது அபார்மென்ட் அருகே இறந்து கிடந்தார்.

கடந்த செப்டம்பரில், தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வந்த மாணவி சவுமியாரெட்டி, அவரது உறவினரான சாப்ட்வேட் இன்ஜினியர் விக்ரம் ரெட்டி ஆகியோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.பென்சில்வேனியாவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், முதுகலைப் பட்ட தாரி சீனிவாஸ் கொல்லப்பட்டார். அதேபோல், ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த மாணவர்கள் கிரண்குமார் மற்றும் சந்திரசேகர் ரெட்டி, வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லூரி ஷஷாங்க் ஆகியோரும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது படுகொலை செய்யப்பட்டு வருவது, அம்மாநில மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.