ஒபாமா அறிவித்த சலுகையால் பங்குச் சந்தையில் சாதக போக்கு

கடந்த வெள்ளியன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்ட நான்காவது காலாண்டு பொருளாதார புள்ளி விவரப்படி வளர்ச்சி 3.8 சதவீதமே இருந்ததால் சந்தைகள் அங்கு தாறுமாறாக கீழே சென்றன. 3.8 சதவீதம் என்பது கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத ஒன்று.

வெள்ளியன்று அங்கு சந்தை மிகவும் கீழே இறங்கியதும், சனியன்று முதலீட்டாளர்களுக்கு இங்கு தூக்கம் இல்லை. அது போலவே நடந்தது திங்களன்று இந்திய பங்குச் சந்தையிலும். மும்பை பங்குச் சந்தை 357 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது. எங்கெங்கு நோக்கினும் அடியாகவே இருக்கிறது சந்தைகளுக்கு.
டி.எல்.எப்., – யுனிடெக் போன்ற கட்டுமானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், எதிர்பார்ப்புக்கு மிகவும் கீழ் இருந்ததால், சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகள் மிகவும் கீழே சென்றன. வங்கி, கட்டுமானத்துறை, மெட்டல் துறைகளைச் சேர்ந்த பங்குகள் மிகவும் கீழே சென்றன.
திங்களன்று பாதாளத்தை நோக்கிச் சென்ற பங்குச் சந்தை, நேற்று முன்தினம் சிறிது சுதாரித்துக் கொண் டது. அமெரிக்காவில் ஒபாமா அரசு அறிவித்துள்ள பெருமளவு பொருளாதாரச் சலுகைகளின் விளைவாகவே ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான போக்கு நிலவியது. முடிவாக 83 புள்ளிகள் கூடி மும்பை பங்குச் சந்தை முடிவடைந்தது. இந்த ஆண்டு நேரடி வரி கலெக்ஷன் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று வந்த அறிக்கைகளை அடுத்து சந்தைகள் நேற்று ஏற்றத் தாழ்வாகவே இருந்தன. முடிவாக 52 புள்ளிகள் கூடி முடிவடைந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 9,201 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,803 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இது சென்ற வார இறுதி அளவை விடக்குறைவு.

ஸ்டேட் பாங்கும் வீட்டுக் கடன்களும்வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 8 சதவீதமாகக் குறைத்து சந்தையில் ஒரு சாதனையே புரிந்திருக்கிறது. இப்போட்டியில், பிற வங்கிகளும் வட்டிக் குறைப்பில் இறங் கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது ஸ்டேட் பாங்க். சமீப காலத்தில் ரிசர்வ் வங்கி பல நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது. வங்கிகள் அமல்படுத்துவதில் தாமதம் இருந்ததால் ரிசர்வ் வங்கி கவலை கொண்டு அனைத்து வங்கிகளும் காலம் தாழ்த்தாமல், வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க உத்தரவிட்டது. அதன் துவக்கம் தான் ஸ்டேட் பாங்கின் வட்டிக் குறைப்பு. முதல் கட்டமாக வீட்டுக் கடன்களுக்கு 11 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு வந்த வட்டியை இப்போது 8 சதவீதமாக்கியுள்ளது. இப்புதிய வட்டி விகிதம் 12 வாரங்கள் அமலில் இருக்கும். ஏற்கனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு எந்த பலனும் இல்லை. புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.
ஸ்டேட் பாங்கின் இந்த வட்டிக் குறைப்பைத் தொடர்ந்து இதர அரசு வங்கிகளும் வட்டிகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளன. வேறு வங்கியில் வீட்டுக் கடன்கள் வாங்கியுள்ளவர்களும் அந்தக் கடன்களை ஸ்டேட் பாங்கிற்கு மாற்ற முயற்சிக்கலாம்.
இந்த அறிவிப்புக்கு பிறகு சந்தையில் ஸ்டேட் பாங்கின் பங்குகள் 4.91 சதவீதம் கீழே விழுந்தன. குறைந்த வட்டியில் கடன் கள் கொடுக்கப் போவதால் வருங்காலங்களில் அந்த வங்கியின் லாபங்கள் குறையலாம் என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கு வந்தது தான் இதற்கு காரணம்.

புதிய வெளியீடுகள் : இச்சமயத்தில் புதிய வெளியீடுகளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் போது, இரண்டு கம்பெனிகள் இந்த வாரம் தங்களது புதிய வெளியீடுகளை துவங்குவதாக அறிவித்துள்ளன. அதில் ஒரு கம்பெனி கடந்த 2ம் தேதி துவங்கிய வெளியீடை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டது. சரியான படி செலுத்தப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மற்றொரு கம்பெனியின் வெளியீடு நாளை துவங்குகிறது.

கடந்த மாத முடிவில் மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 9.5 சதவீதம் கூடியுள்ளது. கடந்த டிசம்பரில் 4.2 லட்சம் கோடிகளாக இருந்த மதிப்பு, ஜனவரி முடிவில் 4.6 லட்சம் கோடிகளாக கூடியிருந்தது. ஒரு ஆறுதல் தரக்கூடிய செய்தி தான். திங்களைத் தவிர மற்ற இரு நாட்களும் சந்தை மேலேயே இருந்தது. ஆனால், திங்களன்று விட்டதை மற்ற இரு நாட்களிலும் பிடிக்க இயலவில்லை. 9,000 முதல் 9,500 அளவிலேயே நிலைத்து நின்றால் போதும் என்றே உள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.