ஆந்திராவில் கொத்தடிமையாக்கி சித்திரவதை : உறவினர்களை மீட்க போராடும் வாலிபர்

திண்டுக்கல்: திண்டுக்கலைச் சேர்ந்த வாலிபர், ஆந்திராவில் முறுக்கு கம்பெனியில் கொத்தடிமையாக வைத்து, கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி சித்திரவதை செய்ததாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்

.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கூவனூத்து வாழந்தாய் கோட்டையைச் சேர்ந்த பெரியசாமி மகன் தேவா(16). இவரை, உசிலம்பட்டி அருகேயுள்ள மேலக்கிழார்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். தேவாவுடன், அவரது உறவினர்கள் முருகன்(15) காளீஸ்வரன்(15) ஆகியோரையும், ஆறு மாதத்திற்கு முன், மகேந்திரன் அழைத்துச் சென்றார். அங்கு, சாப்பாடு, சம்பளம் சரியாகக் கொடுக்காமல், கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த நண்பர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தேவா தப்பி வீட்டிற்கு வந்தார்.

திண்டுக்கல் கலெக்டர் வாசுகியை சந்தித்து அவர் கூறியதாவது: என்னையும், உறவினர்களையும் அழைத்துச் சென்றவர்கள், மூன்று வேளை சாப்பாடு, மாதச் சம்பளம் 3,000 ரூபாய் தருவதாகக் கூறினர். ஆனால், சம்பளமும் தரவில்லை; சாப்பாடும் போடவில்லை. காலையில் தூங்கினால், கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றுவர். கொடுமை தாங்காமல், தப்பி ஓடி வந்தேன். எனது உறவினர்கள் தப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். எனது உறவினர்கள் குறித்து கேட்டால், அவர்கள் முறுக்கு கம்பெனியில் இல்லையென்றும், அவர்களும் தப்பித்து விட்டனர் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். என்னை கொத்தடிமையாக நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேவா கூறினார்.
வாலிபரை கொத்தடிமையாக வைத்திருந்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி சந்திரசேகரன் விசாரணை நடத்தி அறிக்கை தர, கலெக்டர் உத்தரவிட்டார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.